நோன்புப் பெருநாள் வெள்ளிக்கிழமைதான் என்பது பிறைக்குழு கூடி எடுத்த ஏகோபித்த முடிவாகும்
-அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கோரிக்கை-
பிறையைக் கண்டதாக கூறுபவர்கள் நவீன ஊடகங்கள் மூலமாக ஏனைய பிரதேசங்களுக்கு பிறைபார்த்த தகவல்களை வழங்கி அவர்களைப் பிழையாக வழிநடாத்த முயற்சிக்க வேண்டாம். சமூகத்தின் ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்தார்.
நோன்புப் பெருநாள் வெள்ளிக்கிழமைதான் என்பது பிறைக்குழு கூடி எடுத்த ஏகோபித்த முடிவாகும் எனவும் அவர் உறுதிபடக் கூறினார்.
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நேற்று (7) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கூடிய பிறைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாட்டு முஸ்;லிம்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன விசேட முஸ்லிம் சேவை கூடாக அறிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பிறை கண்டதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால்- பிறை தொடர்பான சட்டதிட்டங்களுக்கமைய அவை நிரூபிக்கப் போதியதாக இருக்கவில்லை.
இதனால்- இங்கு கூடிய உலமாக்கள் அனைவரும் நீண்ட ஆலோசனையின் பின்னர் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
பிறையைக் கண்டதாக கூறுபவர்கள் அவர்கள் பார்த்தது அவர்களுக்கு உறுதியாக இருந்தால்- அவர்கள் மாத்திரம் நோன்பு நோக்காதிருந்து- நாளை மறுதினம் அனைவருடனும் சேர்ந்து பெருநாளை ஒற்றுமையாக கொண்டாடலாம்.
அல்லது விரும்பினால் இஜ்மாவான தீர்ப்புக்கு அமைய நோன்பு வைக்கலாம். ஆனால்- பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தவிர்ந்துகொள்ளுங்கள். சமூகத்தின் ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
நாளை மறுதினம் பெருநாள் எடுப்பது நாட்டுக்கோ அல்லாது நாட்டு மக்களுக்கோ தீங்கானது என்ற கருத்தில் எந்த உண்மையும் இல்லை என்பதையும் முஸ்லிம்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மேலும் தெரிவித்தார்
Comments
Post a Comment