உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் காத்தான்குடியில் கைச்சாத்து
முதற்தடவையாக இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் நேற்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில வைத்து கைச்சாத்திடப்பட்டது.
இளைஞர் விவகார திறன்கள அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஹிறா பவுண்டேசன் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மோகன்லால், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றன்களின் தலைவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சவூதி அரேபியா மன்னரின் சார்பில் அஷ்ஷெய்க் யஹ்யா பின் அப்துல் அஸீஸ், மற்றும் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் மசூர் மௌலானா உட்பட உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், முக்கியஸ்த்தர்கள், உலமாக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தள்ளது.
இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகளை அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகளை தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.
அதனடிப்படையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.
இப்பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப் பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழில்நுட்ப நிறுவனக் கட்டிடமொன்றில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இக்கட்டிடங்கள் 3 தொடக்கம் 4 வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு மாற்றப்படவுள்ளது.
இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரஸாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக்கூடிய வகையில் இப்பல்கலைக்கழக கல்லூரி செயற்படவுள்ளது.
Comments
Post a Comment