சாய்ந்தமருதில் நாளை திறக்கவிருந்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவினை நிறுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு!
சாய்ந்தமருதில் கல்முனை மாநகர சபையினால் கட்டி முடிக்கப்பட்ட மீனவர் வாசிகசாலைக்கு சபை அனுமதியின்றி தனிநபர் பெயர் சூட்டுவதையும் அதற்கான விழாவினையும் நிறுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான நிறுத்தக் கடிதத்தினை முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கையொப்பமிட்டு உள்ளுராட்சி ஆணையாளருக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாசிகசாலைக்கு ஒரு மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நிதியினை கல்முனை மாநகர சபை ஒதுக்கீடு செய்து இவ்வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு நாளை திறக்கப்படவிருந்த நிலையிலேயே மேற்படி இதன் திறப்பு விழா நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாசிகசாலைக்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் வைக்கப்பட்டதை அடுத்தே மேற்படி சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இவ்வாசிகசாலை திறப்பு விழா நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment