மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும், வறிய 100 குடும்பங்களிற்கு இலவச நீர் இணைப்பு வழங்குதலும்
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும், வறிய 100 குடும்பங்களிற்கு இலவச நீர் இணைப்பு வழங்குதலும், மாநகர உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார போட்டி நிகழ்ச்சி பரிசளிப்பு விழா என்பன நேற்று (23.05.2013) வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற்றது.
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலையினை இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் திறந்து வைத்தார். இம் மீனவர் வாசிக சாலை மீனவ சமூகத்தின் வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்து அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் குறித்த வாசிக சாலை சாய்ந்தமருது 12ம் பிரிவில் கடற்கரையோரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கல்முனை மாநகர எல்லைக்குள் வசிக்கும் வறிய 100 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பிற்கான பத்திரம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. அத்தோடு வாசிப்பு வாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, சிறுகதை மற்றும் சித்திரம் வரைதல் போன்ற போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மாநகர உத்தியோகத்தர்களை ஊக்குவித்து அவர்களின் பணியினை மேலும் சிறப்படையச் செய்யும்வகையில் மாநகர சபையில் அர்பணிப்புடன் சிறப்பாக கடமையாற்றுகின்ற 15 உத்தியோகத்தர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் சேவையினை பாராட்டி மொடர்ன் கிரபிக்ஸ் நிறுவனத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பிராமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நாற்பெரும் விழா கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத், சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நசார்தீன், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.அமிர்தலிங்கம், ஏ.எம்.றியாஸ், ஏ.எச்.எச்.எம்.நபார், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருலாளர் ஏ.சி.எகியா கான், உலமாக்கள், மாநகர சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment