தமிழர்களுக்கு ஐ.நா.வில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றால் அது நீண்ட நாட்கள் செல்லும்
அரியநேத்திரன் MP
ஜெனீவாவில் அமெரிக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டாலும் அவை நிறைவேற்றத் தேவையானவற்றை அமெரிக்க செய்யும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.தமிழ் நாட்டில் இருந்து ஏனைய மாநிலங்களுக்கு பரவி வரும் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்தியா இலங்கைக்கு சார்பாக செயற்படமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவில் சென்று வந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்காவிட்டாலும் அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிபெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல் ஒருபோதும் இந்தியாவை இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கசெய்யும் என்று தான் நம்பவில்லையெனவும் தெரிவித்தார்.
உலக நாடுகள் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை தாங்கள் அறியக் கூடியதாகவுவுள்ளதாகவும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெறும் வாக்கெடுப்பே தீர்மானிக்கும் என தெரிவித்த அவர், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது இலங்கையை பெரிதளவில் பாதிக்கும் என்று தாங்கள் கருதவில்லையெனவும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இம்முறையும் மீண்டும் ஒரு தடவை காலக்கேடு இலங்கைக்கு வழங்கப்படும் நிலையே ஏற்படும். தமிழர்களுக்கு ஐ.நா.வில் இதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்றால் அது நீண்ட நாட்கள் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment