இன மத பேதமின்றி ஒற்றுமையால் உயர்வடைவோம்!
– மட்டக்களைப்பில் ஜனாதிபதி-
புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் திறந்து வைத்தார்.
289 மீற்றர் நீலமும் 14 மீற்றர் அகலமும் கொண்ட இந்த பாலத்தை நிர்மாணிக்க 1970 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொதலாவ- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்- இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோஇஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாலத்தை திறந்து வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது-
எல்லாவற்றையும் மறந்து அபிவிருத்திப் பாதையில் நாமனைவரும் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக நடைபோட வேண்டும்.
இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் பல பின்னடைவுகளை சந்தித்த ஒரு மாவட்டமாகும். கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது மாத்திரமல்லாமல் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு இந்நாட்டில் நான் பிரதமராக இருந்த காலம். அப்போது நான் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தை நேரில் வந்து பார்வையிட்டேன்.
அப்போது கடுமையான பின்னடைவுகளை கொண்டிருந்த இந்த மாவட்டம் இப்போது பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கண்டு வருகின்றது.
ஆகவே இப்படியான சூழ்நிலையில் நாமெல்லோரும் இன மத பாகுபாடின்றி எமது மாவட்டத்தை மேலும் பல அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்வதற்கு ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மிக குறுகிய காலத்தில் இந்த பாலத்தின் நிர்மாண வேலைகளை முடித்த ஊழியர்களுக்கும் இதற்கு எமக்கு நட்புறவுப்பாலமாக இருந்து உதவி வழங்கிய ஜப்பான் நாட்டிற்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்
Comments
Post a Comment