பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை


பாடசாலை மாணவர்களிடமிருந்து எந்தக் காரணத்துக்காகவும் பணம் அறவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கிறது.

அத்துடன் பாடசாலைக்கான சட்ட ரீதியான கட்டணம் செலுத்தாத மாணவர்களை எந்தவிதத்திலும் உடல், உள ரீதியான அழுத்தங்களுக்கு உட்படுத்தக்கூடாது என்றும் கல்வி அமைச்சு விசேட சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.

இதற்கான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோட்டாபய ஜயரட்ன அறிவித்துள்ளார்.

சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும் மகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்தச் சுற்றுநிருபம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாத விடயங்களுக்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும், தேசிய மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய, நேற்று இந்த சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அனுப்பிவைத்துள்ளார்.

1975ஆம் ஆண்டின் 57/75ஆம் இலக்க வசதிகள் சேவைக் கட்டண சுற்றுநிருபம், 1982.03.30ஆம் திகதிய 82/2ஆம் இலக்க பாடசாலை அபிவிருத்தி சங்க சுற்றுநிருபம், 2008 11ஆம் மாதம் 3ஆம் திகதிய பழைய மாணவர் சங்கம் மற்றும் வேறு சங்கங்களின் நடவடிக்கைகளுக்குரிய 2008/35ஆம் இலக்க சுற்றுநிருபம், பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான 2008.04.30 ஆம் திகதிய 2008/17ஆம் இலக்க சுற்றுநிருபம்,

முதலாம் ஆண்டுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான 2012.05.29ஆம் திகதிய 2012/19ஆம் இலக்க சுற்றுநிருபம் வரை குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ரீதியான கட்டணங்கள் மட்டுமே அறவிடப்படவேண்டும்.

இக்கட்டணங்கள் அறவிடப்படும்போது பின்வருவனவற்றை மிகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் 2013/11 ஆம் இலக்க புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டரீதியான கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும் என பெற்றோருக்கோ, மாணவர்களுக்கோ கட்டாயப்படுத்தவோ, பலவந்தப்படுத்தவோ கூடாது. சட்டரீதியான கட்டணமாக இருந்தாலும் அதனை செலுத்தமுடியாத மாணவர்கள் கிராம சேவகரின் சான்றிதழ் ஊடாக அதனை உறுதிப்படுத்திய பின்னர் சகலவிதமான அறவீடுகளிலிருந்தும் அந்த மாணவனுக்கு விலக்களிக்க வேண்டும்.

குறித்த மாணவனுக்கு கட்டண அறவீடு விலக்களிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய கடிதமொன்றை பாடசாலை அதிபர் பெற்றோருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்கள் எந்தவிதத்திலும் உடல்ரீதியாக, மனோரீதியாக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படக் கூடாது.

அதேபோன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபத்தை மீறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டணம் அறவிடவேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட வழிகாட்டல்களை மீறி சட்டவிரோதமாகச் செயற்படுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை கட்டமைப்புக்குள் சேவை புரிகின்ற ஆளணியினர் எவராக இருப்பினும், அவர்களுக்கு எதிராக ஸ்தாபன விதிக் கோவைக்கு அமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்