கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு
(சௌஜீர் ஏ முகைடீன்)
கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (01.01.2013) காலை மாநகர முன்றலில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் முதல்வர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அத்தோடு முதல்வர் ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கைலாகு கொடுத்து புத்தாண்டு வாழ்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி எச்.என்.எம்.றம்சீன், மாநகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.நபார், ஏ.விஜயரட்னம் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு மாநகர முதல்வர் உரையாற்றுகையில்.
கடந்த மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த கல்முனை பிரதேச வாழ் மக்கள் நிம்மதியாக மூச்சு விட முடியாத துர்ப்பாக்கியமான நிலை காணப்பட்டது. இன்று நம் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அயராத முயற்சியின் பயனாய் அந்த கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் எல்லோரும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் எந்த நேரத்திலும் இலங்கையின் எப்பாகத்திற்கும் சென்று எதையும் சாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றார் என்பதை நாங்கள் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உன்மையாகும். அந்தவகையில் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் கல்முனை மாநகர முதல்வர் என்ற வகையில் மாநகர வாழ் மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் இந்த மாநகர சபையினை 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொறுப்பேற்றேன். முதல்வராக நான் நியமிக்கப்பட்ட காலம் முதல் பல சவால்களுக்கு மத்தியில் இச்சபையினை முன்னெடுத்துச் செல்கின்றேன். மக்களுக்காகவே நாங்களே தவிர எங்களுக்காக மக்கள் அல்ல. எனவே இந்த மாநகர சபையானது அவர்களுக்கான சேவையினை துரிதமாகவும் சீராகவும் வழங்கும் சபையாக மாற வேண்டும். அதற்காக நானும் கௌரவ உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளினதும் ஊழியர்களினதும் ஒத்துழைப்போடு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றாம்.
நான் கடமையேற்று ஒருவருடகாலம் பூர்த்தியடைந்துள்ளது. எனது இக்காலத்திற்குள் இம்மாநகர சபை மக்களுக்கு என்ன செய்திருக்கின்றேன் என தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொள்வதுண்டு. ஏன் என்றால் என்மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதுகாக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் அரசியலுக்கு வந்த நான் கௌரவ உறுப்பினர்களோடு இணைந்து மக்களுக்காக என்னால் முடிந்த சேவைகளை செய்திருக்கின்றேன். அதனால் தற்போது இந்த மாநகர சபை மக்களால் பேசப்படுகின்ற ஒரு சபையாகவும், மந்தகெதியில் இருந்த நிர்வாகம் வினைத்திறன் மிக்க நிர்வாகமாகவும் மாறியிருக்கின்றது. இங்கு கடமையாற்றுகின்ற சகல உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் வழங்கிய ஒத்துழைப்பின் மூலம்தான் அவ்வாறான ஒரு மாற்றத்தை என்னால் காண முடிந்தது.
இந்த 2013ம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக பல திட்டங்களை நான் வகுத்துள்ளேன். எனவே கடந்த காலங்களில் நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு போன்று பன் மடங்கு ஒத்துழைப்பினை வழங்கி அத்திட்டங்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இன்று மலர்ந்திருக்கும் புத்தாண்டில் நாங்கள் எல்லோரும் ஒரு புது யுகத்தை நோக்கி பயணிக்க தயாராக வேண்டும். எனது புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் அனைவரும் கைகோர்த்து செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நாங்கள் சோலை வரியாக பெற்றுக் கொண்ட தொகை என்ன அவற்றை எவ்வாறு செலவு செய்தோம், நாங்கள் என்ன செய்கின்றோம், இங்கு என்ன நடக்கின்றது என்ற அத்தனை விடயங்களும் மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாநகர சபை சேவை வழிகாட்டி என்னும் கைந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. மாநகர சபையின் வரலாற்றில் இவ்வாறான ஒரு கைந்நூல் வெளியிடப்பட்டது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
மாநகர சபை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு கடந்த வருடம் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து அண்ணளவாக 15 இலட்சம் ரூபா செலவில் மாநகர முத்துக்கள் என்ற நிகழ்வினை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இம்முறை நடாத்தப்படவிருக்கின்ற அந்நிகழ்வில் திறமையாக கடமையாற்றுகின்ற மாநகர உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். அந்தவகையில் சகலரது செயற்பாடுகளையும் நான் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் அனைவரும் திறமையானவர்கள். எனவே உங்களது திறமைகளை வெளிக்காட்டி அந்நிகழ்வின் கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாளவும் மாற முயற்சி செய்யுங்கள்.
வார நாட்களில் கடமையில் இருக்கின்ற பொதுமக்களால் மாநகர சபையின் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை தினத்திலும் மாநகர சபை சேவையினை வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே மக்களின் வேண்டுகோலுக்கு அமைவாக மாநகர சபையானது 2013ம் ஆண்டில் இருந்து சனிக்கிழமை நாட்களில் பிற்பகல் 1.00 மணிவரை மக்கள் பணிக்காக வழமைபோல் செயற்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இம்மாநகர சபையில் கடமையாற்றுகின்றவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கக்கூடாது. நிதி, நிர்வாகம் என்று பல்வேறு பட்ட பிரிவுகளிலும் தேர்ச்சியினை பெறவேண்டும் என்பதற்காக இவ்வருடம் உள்ளக இடமாற்றத்தை செய்யவுள்ளேன். இதனால் நீங்கள் மாநகர சபையில் இருந்து வேறு காரியாலயங்களிற்கு இடமாற்றலாக செல்கின்றபோது எந்தப் பிரிவாயினும் உங்கள் வினைத் திறனை காண்பிக்க முடியும்.
இங்கு கடமையாற்றுகின்ற சுகாதர தொழிலாளர்களையும் அவர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கின்றேன். முகம் சுழிக்காது அவர்கள் ஆற்றுகின்ற சேவையினால் தான் இம்மாநகரம் சுத்தமாகவும் பசுமையாகவும் காட்சி தருகின்றது. அவர்கள் எந்நேரத்திலும் என்னை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை என்னிடம் தெரிவிக்க முடியும். என்னைச் சந்திப்பதற்கு எவரும் தயங்க வேண்டியதில்லை. எனது கதவு என்னேரமும் திறந்திருக்கின்றது. என்னால் முடியுமானவரை அவர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வேன். தற்போது நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கின்றது. அந்நியமனத்தின்போது சுகாதார தொழிலாளிகளுக்கு முன்னுருமை வழங்கவிருக்கின்றேன்.
வரலாற்றிலே முதல் தடவையாக 2012ம் ஆண்டு 93 இலட்சம் ரூபாவினை சோலை வரி வருமானமாக நாம் பெற்றிருக்கின்றோம். மக்கள் முதல்வர் மீதும், முதல்வரின் செயற்பாட்டின் மீதும் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் பயனாக ஈட்டப்பட்ட வருமானமே இதுவாகும். மக்கள் எமது சேவையினை பெறுவதற்காக இங்கு வருகின்றபோது அவர்களுடன் இன்முகத்தோடு அன்பாக அவர்களின் தேவையினை கேட்டறிந்து பூர்த்தி செய்யக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். இலஞ்சம், ஊழல் போன்ற செயற்பாடுகளிற்கு யாராவது துணையாக இருப்பது ஆதாரத்துடன் எனது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றபோது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன் என்பதை இப்புதுவருடத்தில் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
பிறந்துள்ள 2013ம் ஆண்டு சகலருக்கும் சாந்தியும் சமாதானமும் சௌபாக்கியமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். நாம் எல்லோரும் ஒன்றினைந்து கைகோர்த்து 2013ம் ஆண்டை வெற்றி ஆண்டாக மாற்றுவோம் எனத் தெரிவித்தார்.
Comments
Post a Comment