மூன்று மாகாண சபைகளுக்கு நாளை தேர்தல்: 108 பேரை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி






கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து. 108 உறுப் பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறு கிறது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார்.
மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 (3073) வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
நாளை காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து இன்று (07) வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்படும்.
தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் இன்று முதல் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பித்தனர் .

திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 14 பேரை தெரிவு செய்வதற்காக 578 பேர் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 (4,41,287) பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 463 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்