செய்யுங்கள் அல்லது செய்பவர்களை விடுங்கள்
அதாவுல்லா
பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் திங்கட்ழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை பிச்சைக்காரனின் காலில் ஏற்பட்ட புண்ணை போன்று முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது போல், கிழக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்ட முடியாது. இங்கு மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து கிழக்கு மக்களுக்கு செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்லில் முஸ்லிம் காங்கிரஸின் சகோதரர் ஹஸன் அலி போன்றவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆணை தாருங்கள் என்று கோரினர். இத்தேர்தலிலும் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கும் திட்டத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ளது.
இரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்கும் திட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸின் போட்டியிடும் வேட்பாளகளுக்கு தெரியாது. எனினும் இத்திட்டத்தை உயர் மட்ட உறுப்பினர்கள் அறிவார்கள். இது பெரியதோர் வியாபாரமாகும். இந்த வியாபாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது.
யுத்த பயங்கரவாதத்தின் போது வைத்தியசாலைகள் மீது கூட மக்களிடைய சந்தேகங்கள் எழுந்ததுடன் பயமும் இருந்தது வந்தன.
இந்த நிலை இன்று இல்லை. அது மாறி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வைத்தியசாலைகள் பொதுவானவை. அது எல்லா இனங்களுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறன.
முன்னொரு காலத்தில் எமது வைத்திய தேவைக்காக மட்டக்களப்புக்கும் பதுளைக்கும் செல்ல வேண்டியிருந்தது. இன்று ஒவ்வொரு ஊரிலும் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வைத்தியசாலைக்கு ஒதுக்க வேண்டியதை உரியவர்கள் ஒதுக்க வேண்டும் அல்லது கொடுப்பவர்களை கொடுக்க விட வேண்டும்" என்றார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment