TNA-SLMC முறிவு
கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார்.
அந்த மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் கிடைக்காத காரணத்தால், இன்றுவரை தனித்து போட்டியிடுவது என்கிற முடிவையே தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பில் கட்சியில் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் பொன் செல்வராஜா தெரிவித்தார்;
இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் பட்சத்தில், தம்மால் தனியாக அங்கு ஆட்சி அமைக்க முடியுமா என்கிற கேள்விகளும் இருக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் சம அளவில் வாழ்ந்து வரும் சூழலில், தனித்தே ஆட்சி அமைக்க முடியும் என்று தமது கட்சியால் முற்றுமுழுதாக நம்பிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
எனினும் மற்ற கட்சிகளிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்தால் தனித்து போட்டியிடுவது என்று இதுவரை எடுக்கப்பட்டுள்ள முடிவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பும் உள்ளது என அதன் பொன் செல்வராஜா தெரிவித்தார்
Comments
Post a Comment