கிழக்கு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைகளுடனையே ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும்..?
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் நிபந்தனைகளுடன் மாத்திரமே போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட வேண்டும் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று புதன்கிழமை அதிகாலைவரை நீடித்த இந்த அதியுயர்பீடக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவி எமது கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டால் முதலமைச்சர் பதவி பிரதான நிபந்தனையாக அதில் இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளளார். இதனையடுத்து, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடபர்பிலான இறுதி தீர்மானம் எடுப்பதற்காக அதியுயர் பீடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளது என குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அதியுயர் பீட கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment