துப்பாக்கிச் சூட்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் சகோதரர் படுகாயம்
நேற்றிரவு திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளரின் சகோதரர் படுகாயமடைந்துள்ளார். இதேநேரம் இவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வியாபாரி இளைஞனொருவர் ஆபத்தான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் தம்பியான அகமட்லெப்பை நஸீம் (வயது 39) நேற்றிரவு 7.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அருகில் தனது காரை நிறுத்திவிட்டு சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவ்வேளையில் அவ்விடத்திற்கு ஆட்டோ ஒன்றில் வந்தவர்கள் இவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கீழே விழுந்தவரை அங்கு நின்றவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற அதேநேரம், ஆட்டோவில் தப்பிச் சென்ற ஆயுததாரிகளை, சில இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றுள்ளனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிள் வீதியோர மின்கம்பத்துடன் மோதுண்டத்தில் ஒருவர் படுகாயமடைந்த பாலப்பலம் விற்பனை செய்துகொண்டிருந்த ஒருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பின்னர் அம்பாறை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
Comments
Post a Comment