கிழக்கு முதல்வராக அந்த மாகாணத்தவரே வரவேண்டுமென்ற வரையறை இல்லை: எஸ்.எம்.ஏ.கபூர்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த மாகாண மண்ணில் பிறந்தவராகவோதான் இருக்க வேண்டும் என்கிற நியதிகளோ, வரையறைகளோ இல்லை. 

கிழக்கு மகாணத்தில் பிறந்தவர்கள்தான் - அந்த மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று அண்மையில் கூறப்பட்ட கருத்தானது தனிப்பட்ட ஒரு நபரின் அபிப்பிராயமேயன்றி, அது கிழக்கு மக்களின் முடிவல்ல' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளரும் அக்கட்சியின் உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ

'கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதன் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற நிபந்தனையினை தனிநபரொருவர் வெளியிட்டுள்ளார். ஆனால், கிழக்கின் முதலமைச்சராக அந்த மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வரவேண்டும் என்று - கிழக்கு மக்கள் ஒருபோதும் மல்லுக்கட்டியதில்லை.  

கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அரசு சார்பான பொது வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. இது இன்னும் நிச்சயிக்கப்படவில்லை. 


கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டிபோட்டு அமோக வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்றவர். அதேபோன்று திருமலை மாவட்டம் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அம்மாகாண சபைக்கு தெரிவானார்.

எனவே, கிழக்கு மக்களால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மு.கா. தலைவர் ஹக்கீம், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டால் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பும் வசதிகளும் அதிகம் உள்ளன.

இந்த வாய்ப்பானது - ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களை விடவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீமுக்கே அதிகம் உள்ளது. அரசியல் ஆளுமையும், அனுபவமும், எல்லா விதத்திலும் முழுத்தகுதியும், தகமையும் பொருந்தியவர் ஹக்கீம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஆனாலும், இந்த விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசோ, அதன் தலைமைத்துவமோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது வேறுவிடயம். 

மற்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் - பிரதேசவாதங்களுக்கு அப்பால் நின்று செயற்படும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாலும், தமிழ், சிங்கள மக்களாலும் அன்று முதல் இன்றுவரை பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றார்.

பிரதேசவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற மூலமந்திரத்தை முன்னிறுத்தித் தோற்றுவிக்கப்பட்டதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர்  எம்.எச்.எம்.அஸ்ரபின் மறைவுக்குப் பின் கம்பளையில் பிறந்த திருமதி. பேரியல் அஸ்ரப் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டபோது, பேரியல் இஸ்மாயிலுக்கு எதிராக யாரும் பிரதேச வாதத்தினைத் தூக்கிப் பிடிக்கவில்லை. 

இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டில் முதலமைச்சரான போது, இலங்கை மண்ணில் பிறந்த ஒருவர் தமிழ் நாட்டின் தலைவனாக எப்படி வரலாம் என்று அங்குள்ள மக்கள் கேட்கவில்லை. இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸின் தலைவியாக வரமுடியாதென இந்திய மக்கள் வரம்பு போடவுமில்லை. இவை உலக அரசியலில் நாம் அறிந்த உதாரணங்களாகும். 

இதேவேளை, பிரதேசவாதங்களுக்கும் சாதிமத பேதங்களுக்கும் அப்பால் நின்று இம்முறை ஒரு முஸ்லிம் முதலமைச்சரை கிழக்கு மாகாணத்தில் பெறுவதற்கு தமிழ் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். 

ஏனெனில் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தும் அதிக உறுப்பினர்களை அச்சபையில் பெற்றிருந்தும் கூட, தமிழ் சகோதரர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஆதரவை வழங்கினார்கள். 

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் முஸ்லிம்கள் மதித்து மரியாதை செய்து வந்துள்ளார்கள் என்பதை எவரும் எழிதில் மறந்துவிட முடியாது' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்