கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும்; மு.கா. பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் அடித்துக் கூறுகிறார்!


கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அடித்துக் கூறியுள்ளார்.
அதேவேளை கிழக்கின் முதலமைச்சராக இம்முறை இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகன் ஒருவருக்கு இடமளிக்க தமிழ் சமூகம் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்ற MCAS கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கௌரவ அத்தியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இக்கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; 'மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் நாட்டின் பல பகுதிகளிலும் தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். அந்த வகையில் தான் இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமை அன்று கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கி, தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்ததுடன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் அமர்த்தினார்.

அதேவேளை தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் இந்த மண்ணை சேர்ந்த சட்டத்தரணி சேகு இஸ்சதீனை முதலமைச்சர் வேடபாளராக நிறுத்தி எதிர்க் கட்சித் தலைவராக அமர்வதற்கு வழி சமைத்தார் என்பதை நாம் மறந்து விட முடியாது.

இந்த பிரதேச மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆட்சியை இந்த மண் பிறந்த ஒருவரே ஆள வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தை எங்கோ இருந்து வருகின்ற ஒருவரின் கைகளில் ஒப்படைத்து விட்டு நாம் பின்னர் கைசேதப்படக் கூடாது. அவ்வாறு நடக்குமாயின் நாம் மேலும் ஐந்து வருடங்கள் ஏக்கத்துடன் காலத்தை கடத்த நேரிடும் என்பதை அனைவரும் இப்போதே புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமையவுள்ளது. தமிழரின் அங்கீகாரம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக இத்தேர்தலில் போட்டியிடப் போகிறது. ஜெனிவா மாநாட்டுக்குப் பின்னராக அமையப் போகின்ற இம்மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் உட்பட பெரும் அதிகாரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகையினால் இத்தகைய உயர் அதிகாரங்கள் பொருந்திய மாகாண சபையை இந்த மண் பிறந்த ஒரு முஸ்லிம் மகன் ஆள்வதன் மூலமே எமது பிராந்தியத்தைக் கட்டியெழுப்பவும் மக்கள் நலன்களை நிறைவேற்றவும் முடியும் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இந்த விடயத்தில் எமது மக்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

அதேவேளை வடக்கு மாகாண சபைக்கும் தேர்தல் நடக்க இருப்பதால் கிழக்கில் ஒரு முஸ்லிம் மகன் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் சமூகம் இம்முறை இடமளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில் இப்பகுதியில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவிப்பதற்கு சிங்களப் பேரின சக்திகள் பாரிய சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இது விடயத்தில் இரு சமூகத்தினரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். யுத்த காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இப்போதைய சூலில் அந்த உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதை இரு தாரப்பினரும் புரிந்து செயற்பட வேண்டும். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், தமிழர் விடுதலைக் கூட்டணி மூலமே அரசியலில் ஈடுபட்டார். யுத்தம் தலை தூக்கியதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்து முஸ்லிம்களுக்காக பேச வேண்டிய தேவை ஏற்பட்டது.

இன்று யுத்தம் முடிவடைந்திருக்கின்ற சூழ்நிலையில் இரு சமூகங்களும் ஒன்றிணைந்தே தமது சமூகங்களுக்காகப் போராட வேண்டியுள்ளது. ஆனால் இந்த ஒற்றுமையை சீர்குலைத்து அதில் குளிர் காய்வதற்கு சிங்களப் பேரின சக்திகள் முயற்சித்து வருகின்றன. இதற்கு எமது அரசியல் தலைமைகள் துணை போவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது' என்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்