எஸ்.எம்.எஸ். மூலம் தண்டப்பணம் செலுத்தும் புதிய நடைமுறை
வாகன சாரதிக ளுக்கு எஸ். எம். எஸ். ஊடாக தண்டப் பணம் செலுத்தும் புதிய நடைமுறையொன்றை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தவுள் ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப் பணம் செலுத்துவதற்காக போக்குவரத்து பொலிஸார் அபராத பத்திரம் வழங்குவார்கள். இதனை அருகிலுள்ள தபாலகத்தில் செலுத்தி அவர்களினால் வழங்கப்படும் பணம் செலுத்திய ரசீதை மீண்டும் போக்குவரத்து பொலிஸாரிடம் காண்பித்து தமது சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறையினால் சாரதிகள் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்குகி ன்றனர். குறிப்பாக கொழும்பிலுள்ள சாரதி ஒருவர் மாத்தறைக்கு செல்கையில் அங்கு அவர் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்காக போக்குவரத்துப் பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்டால் அவர் தபாலகம் ஒன்றை தேடிச் செல்ல வேண்டும்.
பயணத்தின் அவசரம் காரணமாக தண்டப் பணத்தை பிறகு செலுத்தலாம் என அவர் பயணத்தை தொடர்ந்தால் தண்டப் பணத்தை செலுத்துவதற்காக மட்டும் அவர் மாத்தறை செல்ல வேண்டும்.
இதனை தடுக்கும் நோக்கிலேயே இப் புதிய எஸ். எம். எஸ். முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தனது செல்லிட தொலைபேசி ஊடாக குறித்த தண்டப் பணத்தை செலுத்தியவுடன் பொலிஸ் தலைமையகத்தில் தரவுகள் பதியப்படும்.
தண்டப் பணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற அறிவித்தல் தொலைபேசிக்கு மீண்டும் கிடைத்தவுடனேயே சாரதி அனுமதிப் பத்திரத்துடன் தனது பயணத்தை தொடரலாம். தொலைபேசி கட்டணத்துடன் தண்டப் பணத்தை செலுத்தலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Comments
Post a Comment