மருதமுனை வீட்டு திட்டம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை



அரச அதிபர் தெரிவிப்பு 

“சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை 65 மீற்றருக்குட்பட்ட  மக்களின் வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை மாவட்ட செயலாளராகிய நான் நன்கு அறிந்துள்ளமையினால் பிரதேச செயலாளரை விடுத்து எனது நேரடிப் பொறுப்பிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கையளிக்க நடவடிக்கை எடுப்பேன்.” இவ்வாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. அல்விஸ் தெரிவித்தார்.

வீடுகளைக் கைளயிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பில் மருதமுனை 65 மீற்றருக்குட்பட்டோர் அமைப்பினரின் செயற்பாட்டில் அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நேற்று புதன் கிழமை (04.04.2012) அம்பாரை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாவட்ட செயலாளருடன் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எல். அன்வர்டீன் அவர்களும் கலந்து கொண்டார்.

மருதமுனையின் சார்பில் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.எல்.எம். ஹனீபா மௌலவி, சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ். ஜலால்தீன் மௌலவி, பொறியியலாளர் நஸ்றுல் கரீம், நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத், கல்முனை மாநகர உறுப்பினர் ஏ.ஆர். அமீர், அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.எம். பாறூக், வர்த்தக சங்க செயலாளர் எம்.எச். தாஜுதீன், இணைப்பாளர் எம்.எஸ். ஜெலீல், ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா, ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எம்.ஏ. சமது, எஸ்.எல். ஜலால்தீன் ஆகியோருடன் 65 மீற்றர் வீட்டுத்திட்ட அமைப்பின் பிரதிநிதிகளும் ஊரின் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு மேலும் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்@ மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத்திட்டம் எட்டு வருடங்களாகியம் உரிய பயனாளிகளிடம் சென்றடையாமையை நினைத்து மனம் வருந்துகின்றேன். அவர்களுக்கென்றே கட்டப்பட்ட இவ் வீட்டுத்திட்டத்தை சம்பந்மில்லாதவர்கள் பெற்றுக் கொள்ளவோ அபகரிக்கவோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன்.

அம்மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்ற நல்ல நோக்கில் வருகை தந்துள்ள உங்களது கோரிக்கைகளையும் அதற்கான மகஜரினையும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். கட்டப்பட்டுள்ள 178 வீடுகளில், வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் பெயர்பட்டியலை வெளியிடுவேன். அதில் ஏதாவது பிழைகள் இருப்பின் நேரடியாகவே எழுத்து மூலம் என்னிடம் சமர்ப்பிக்க முடியும்.

கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள இடைஞ்சல்களைக் குறைக்கும் நோக்கில் அவர்களின் எந்தச் சிபாரிசுகளும் இன்றி நேரடியாகவே பெயர்ப்பட்டியல் தொடர்பிலான முறைப்பாடுகளைச் செய்ய வழி ஏற்படுத்துவேன். இவ் வீட்டுத்திட்டக்கையளிப்பு தொடர்பில் கூட்டம் கூட்டவோ நடவடிக்கை எடுக்கவோ கூடாது என முஸல்pம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பேன்.

கட்டப்பட்டுள்ள 178 வீடுகளில், பயனாளிகளின் வீடுகள் போக மீதமுள்ளதை 2 ஆம் கட்டமாகத் திறந்த நேர்முகப் பரீட்சையின் மூலம் மேலும் இதுவரை சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகிடைக்காமல் உள்ளவர்களுக்கு கையளிக்க நடடிக்கை எடுப்பேன்.

வீடுகளை இழந்து நிற்கதியற்ற மக்களில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அத்துமீறி அனுமதியின்றிக் குடியேறியுள்ளனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே வீடுகளைக் கையளிக்க முடியும். இது தொடர்பிலான வழக்கொன்று நீதிமன்றில் இருப்பதால் நீதிமன்றத்திற்கும் இதுபற்றி அறிவிக்கவும் வேண்டும். தற்போது வந்துள்ள மருதமுனை பிரதிநிதிகளாகிய நீங்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளோரை வெளியேற்றித் தருவதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்.

அதனை உடனடியாக செயற்படுத்தி மீண்டும் உரிய முறையில் வீடுகளைக் கையளிக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படுவதுடன் அரசியலினை இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்தாமல் சுயாதீனமாக செயற்படுவதும் பொருத்தமாக இருக்கும் என நான் நம்புகின்றேன் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இறுதியாக பாதிக்கப்பட்ட 65 மீற்றர் அமைப்பினர் சார்பில் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்