கல்முனை மாநகரம் சகல வசதிகளும் கொண்ட நவீன நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்



தேசிய
முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்





கிழக்கிலங்கையின் முன்னணி வர்த்தகக் கேந்திர நிலையமாகவும் தென்கிழக்கின்
முகவெற்றிலை எனவும் அம்பாரை கரையோர மாவட்டத்தின் தலைநகர் எனவும் மிகவும்
பிரபல்யமாக பேசப்படும் கல்முனை மாநகரம் சகல வசதிகளும் கொண்ட நவீன நகரமாக
அபிவிருத்தி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய
முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்தி
தேசிய முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம்.ஐ.எம். வலீத், செயலாளர் நாயகம் அஸ்லம்
எஸ். மௌலானா ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்முனை மாநகரினை மையமாகக் கொண்டு காலத்திற்குக் காலம் பலர் பாராளுமன்ற
உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவிகள் வகித்தாலும் இன்று வரை
கல்முனையின் அபிவிருத்தியானது மிகவும் மந்த கதியிலேயே நடைபெறுவதனை
காணக்கூடியதாக உள்ளது.

கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நமது நகரமும்
ஏனைய நகரங்களைப் போன்று அபிவிருத்தியடையாதா என்ற அபிலாஷையுடனும்
ஏக்கத்துடனும் காணப்படுகின்றனர்.

அப்போதைய வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின்
பெரு முயற்சியின் பயனாக பல்வேறு அரச தலைமைக் காரியாலயங்களும்
திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் கல்முனையில் நிறுவப்பட்டதோடு
பல்வேறு அபிவிருத்திகளையும் இம்மாநகரம் கண்டது.

1988 க்குப் பின்னர் இனப்பிரச்சினை காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட
நகரங்களில் கல்முனை நகரமும் ஒன்றாகும். ஆனால் இதுவரை இவைகள் குறித்து
போதுமான கவனம் செலுத்தப்பட்டதாகவோ அல்லது மக்களுக்குத் தேவையான அடிப்படை
வசதிகளைத்தானேனும் வழங்கியதாகவோ வரலாறுகள் இல்லை.

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வருகையோடு முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கல்முனை
மாநகரினை ஒரு தலைசிறந்த நகரமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்துத்
திட்டங்களையும் தயார் செய்து திட்டங்களைப் பூரணப்படுத்துகின்ற தறுவாயில்
அவரது மரணம் சம்பவித்தது மிகவும் வேதனைக்குரிய வியடமாகும்.

அதன் பின்னர் அமைச்சர்களாக பதவி வகித்த திருமதி பேரியல் அஷ்ரப், ரஊப்
ஹக்கீம் ஆகியோர் இம்மாநகரினை அபிவிருத்தி செய்வார்கள் என மக்கள் பெரிதும்
நம்பினர். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கல்முனை மாநகர
சபையாக எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி தரமுயர்த்தப்பட்டதைத் தவிர வேறு
எதனையும் இவர்களால் கூட செய்ய முடியவில்லை.

அமைச்சர் அஷ்ரபினால் முன்மொழியப்பட்ட சந்தாங்கேணி மைதானத்தினை சர்வதேச
தரத்திலான மைதானமாக அபிவிருத்தி செய்தல், இனங்களுக்கிடையே நல்லுறவினைப்
பேணும் வகையிலான ஐக்கிய சதுக்கம், மாடி வீடமைப்புடனான நவீன பஸ்தரிப்பு
நிலையத் தொகுதி, வர்த்தக கட்டிடத் தொகுதிகள் மற்றும் பல முக்கிய தனியார்
நிறுவனங்கள் என்பனவற்றை பொருத்தமான முறையிலும் தேவையின் நிமித்தமும்
முன்மொழிந்திருந்தார்.  இவைகளில் ஒன்றைத்தானேனும் இதுவரை இம்மாநகரம்
சார்பாக நிறைவேற்ற முடியாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

அதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா கல்முனை நகரை திட்டமிட்ட
அடிப்படையில் நவீன நகராக அபிவிருத்தி செய்வதெற்கென கல்முனையில் நகர
அபிவிருத்தி அதிகார சபையை நிறுவி அதன் மூலம் சில ஆரம்பக் கட்ட
நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சில
தரப்புகள் முட்டுக்கட்டை போட்டதனால் அவரது திட்டமும் முன்னகரவில்லை.

சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகமான உயிரழிவுகளையும் உடமை அழிவுகளையும்
சந்தித்த நகரங்களில் கல்முனை மாநகர பிரதேசம் முதன்மையானதாகும். இந்த
அனர்தத்தின் பின்னர் கல்முனையை நோக்கி வருகை தந்த சர்வதேச அரச சார்பற்ற
நிறுவனங்களைப் பயன்படுத்தி நகரின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்வதற்கு
எவருமே பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காதது மிகவும் வேதனைக்குரிய
விடயமாகும்.

காலா காலமாக கல்முனை மாநகர் பிரபல்யமாகப் பேசப்பட்டாலும் பிரபல்யத்திற்கு
ஏற்ப அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு நகரமாகக் காணப்படுவதுடன்
இதுவரை கல்முனைப் பிரதேச செயலகம், மாநகர சபை, வலயக் கல்வி அலுவலகம்,
காணிப் பதிவகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட பல அரச
நிறுவனங்களும் தனியார் அமைப்புக்களும் தங்களுக்கென பொருத்தமான அலுவலக
கட்டிடங்களைக் கூட பெறாமல் இருப்பது இந்நகரின் அபிவிருத்தியின் சிறப்பினை
அளவிடுவதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

கல்முனையின் பின்னர் உருவாக்கப்பட்ட பல நகரங்கள் அதனது தேவைகளுக்கும்
அதிகமான வசதிகளைப் பெற்றுள்ளதுடன் பல கோடிக் கணக்கான அபிவிருத்திகளை
தொடர்ந்தும் பெறுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் விசேட அபிவிருத்தி
செயற்திட்டங்களினுள் உள்வாங்கப்பட்டு பல்வேறு வகையான அபிவிருத்திகள்
இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் கல்முனையின் நிலைமையோ
எவருடைய கவனத்தையும் ஈர்க்காமல் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது.

எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாது நகரின் அழகினைக் கெடுக்கும் தேவையற்ற
கட்டிடங்களை அகற்றி சகல வசதிகளும் கொண்டதாக பொதுமக்கள் மன திருப்தியுடன்
சேவைகளைப் பெறத்தக்கதான ஒரு நவீன நகரமாக கல்முனை மாநகரம் அபிவிருத்தி காண
சகல தரப்புக்களும் பேதங்களை மறந்து கருத்தொற்றுமையுடன் செயற்பட முன்வர
வேண்டும்' என தேசிய முஸ்லிம் கவுன்சில் தனது அறிக்கையில்
வலியுறுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்