எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த கல்முனை மாநகரினை அபிவிருத்தி செய்தே தீருவேன்.



எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த கல்முனை மாநகரினை அபிவிருத்தி  செய்தே தீருவேன். எனது அதிகாரத்தின் மூலம் எந்த இனப்பாகுபாடும் பிரதேச வேறுபாடும் அற்ற ரீதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள எத்தனிக்கிறேன் என்பதற்கு இப்பிரதேச தமிழ் மக்களே ஆதாரமாகும் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.


கல்முனை மாநகர சபை த.தே.கூ. உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம், தனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பத்திரிகையில் வெளியிட்டிருந்த செய்திகளுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது;

'கல்முனை மாநகர முதல்வராகிய நான் இனவாதத்ததை தூண்டுவதாகவும் தமிழ் பிரதேசத்தின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் த.தே.கூ உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம் பத்திரிகை அறிக்கை மூலம் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இதன்மூலம் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க அவர் எடுக்கின்ற முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம். கல்முனை மாநகர சபை உறுப்பினர் அமிர்தலிங்கம் போன்றோரின் சுயநல அரசியலுக்காக எமது பிரதேச மூவின மக்களையும் பலிக்கடாவாக்கி, அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் தமிழ் மக்களுடன் கொண்டுள்ள அன்புக்கு ஆதாரம் அவர்களது பிரதேச அபிவிருத்திக்கான எனது முன்மொழிவுகளாகும்.

கல்முனை மாநகரினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்ட அடிப்படையில் நான் செயற்பட்டு வருகின்றேன். அதற்கு மாநகர சபை உறுப்பினர்களும் எனக்கு பக்கபலமாக இருக்கின்றார்கள். நாங்கள் பாரிய அபிவிருத்தி வேலைகளை இனம்கண்டு வருகின்றோம். அதனை எதிர்காலத்தில் செயற்படுத்த எத்தனிக்கின்றபோது, இதனை ஜீரணிக்க முடியாத சில சுயலாப, வங்கரோத்து அரசியல்வாதிகள் என்மீது அபாண்டமான பழியினை சுமத்த முற்படுகின்றார்கள். இதனைக் கண்டு பயந்து ஒதுங்கும் நிலையில் நானில்லை.

அரசியல் தெரியாமல் இந்த கதிரைக்கு நான் வரவில்லை. நான் 45 நாட்களில் அரசியலுக்கு வந்து- தேர்தலில் வெற்றியீட்டி தற்போது 4 மாத காலத்துக்குள் பாரிய முயற்சிகளை செய்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பத்திரிகைகளில் விடும் அறிக்கைகளினால் மட்டும் எனது சேவையை நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. முடியுமாக இருந்தால் வேற்றுமைகளை மறந்து எல்லோரும் ஒன்றுபட்டு வாருங்கள் நாம் கல்முனையை முன்னுதாரணமான மாநகர சபையாக மாற்றுவோம்.



இச்சபையில் 4 த.தே.கூ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அமிர்தலிங்கத்தைத் தவிர வேறு எவரும் இவ்வாறு முரண்பட்டுக் கொள்ளவில்லை. பழுதடைந்த மின் குமிழ்கள் மாற்றுவதிலும் இன விகிதாசாரத்தை பேண வேண்டுமா? எங்கு இருள் சூழ்ந்து காணப்படுகின்றதோ அங்கு மின் குமிழ்கள் பொருத்தப்படும். இதில் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்? என்னை பல இடங்களில் புகழ்ந்து பாடிய இந்த அமிர்தலிங்கம் தற்போது ஏன் இவ்வாறு முரண்படுகின்றார் என்பதுதான் புரியாமல் இருக்கின்றது.

எமது தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நாம் கல்முனைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வருவதை சற்று பிற்போட்டுள்ளோம். எதிர்வரும் 16ம் திகதி இந்த மாநகருக்கு அவர் வரவுள்ளார். நாம் அவரைக் கொண்டு இயலுமான அபிவிருத்திகளை இம்மாநகருக்கு கொண்டுவர இருக்கின்றோம்.

இவ்வாறு மக்கள் நலனையும் பிரதேச அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் எமக்கு இறைவனின் உதவியுடன் பிரதேச மூவின மக்களினுடைய ஆதரவும் இருக்கும் வரை எவராலும் எங்களை ஓரங்கட்ட முடியாது' என்றும் கூறினார்.

இம்மாநாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர்,பறக்கத்துல்லா, அமீர், உமர் அலி, எம்.நபார், ஐ.தே.க. சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்ட பி.தாமோதரம் உட்பட மாநகர சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்