அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் மாரடைப்பால் மரணமானார்.
கிழக்கு மாகாணத்தின் மனித நேயப்பணியாளரும் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் முன்னாள் மட்டு அம்பாறை மாவட்ட இயக்குனரும் மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் தற்போதய நிதிப் பொறுப்பாளருமான கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் நேற்று (08) அதிகாலை மாரடைப்பால் மரணமானார்.
மரணிக்கும்போது இவருக்கு வயது 50 ஆகும். அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்டர் திடிரென மாரடைப்பினால் நேற்றிரவு பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கையில் இவர் மரணமடைந்துள்ளார்.
கல்முனை பற்றிமா கல்லூரி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் 12 வருடங்கள் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் இயக்குனராக கடமை யாற்றினார். இவர் சுனாமி மற்றும் அனர்த்தம் போன்றவற்றின்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மனிதாபிமானப்பணி செய்து அனைத்து சமூங்களினதும் நன் மதிப்பை பெற்றார்.
சமாதான நீதவானான அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் புதுடில்லியில் 2006ம் ஆண்டு சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினைப் பெற்றதுடன் சுனாமி அனர்த்தத்தின்போது சிறப்பாக கடமையாற்றியமைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விருதினையும் 2006ம ஆண்டு பெற்றார்.
ஜெனசெவன ஜாதிக சமனாய, மற்றும் தேச சக்தி, தேசமான்ய, தேச பந்து போன்ற பட்டங்களையும் பெற்றதுடன் பல்வேறு உயர்ப்பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
இவரின் சிறந்த சமூக சேவையை கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பாராட்டி கெளரவித்ததுடன், இவரின் மனிதாபிமானப் பணிகளை பாராட் இலங்கையின், இலங்கையின் பல்வேறு அமைப்புக்கள் கெளரவ பட்டங்களையும் இவருக்கு வழங்கி வைத்தன.
அருட் தந்தை கலாநிதி சிறிதரன் சில்வஸ்ட்டரின் பூதவுடல் மட்டக்களப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளியிலுள்ள அவரது உறவினர் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் பூதவுடலுக்கு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள பெருந்திரளான தமிழ், முஸ்லிம் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பூதவுடல் மட்டக்களப்பு சிலோம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள எஹெட் அலுவலகத்திலும் பின்னர் புனித மிக்கேல் கல்லூரியிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் புனித மரியாள் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து இவரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment