பழுதடைந்த மின் விளக்குகளை திருத்துவதிலும் இன விகிதாசாரம் வேண்டும் எனக் கோருவது எந்த வகையில் நியாயம்?



கல்முனை தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் தனக்கூடாகவே  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர் அமிர்தலிங்கம் விடுத்த கோரிக்கையை நான் நிறைவேற்றவில்லை என்பதாலேயே 'தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிப்பு' என்ற கோசத்தை அவர் முன்வைத்துள்ளார் என கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.


கல்முனை முதல்வரினால் 'தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிப்பு' என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் மேலும் தெரிவித்திருப்பதாவது;

'கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான திரு. அமிர்தலிங்கம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது கல்முனை அபிவிருத்தி நடவடிக்கைகளில் கல்முனை தமிழ்ப் பிரதேசம் மேயரினால் புறக்கணிக்கப்படுவதாக பேசியுள்ளார். இந்த செய்தி சில தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தது.

ஆனால் உறுப்பினர் அமிர்தலிங்கம் கூறிய கூற்றில் எவ்வித உண்மையுமில்லை. மாநகர சபையின் முக்கிய பணிகளில் தெரு மின் விளக்குகளைப் பராமரிப்பதும் ஒன்றாகும். மேயராக நான் பதவியேற்ற போது பழுதடைந்த மின் விளக்குகளை திருத்தும் நடவடிக்கையின் பேரில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

பழுதடைந்த மின் விளக்குகளை திருத்துவதிலும் இன விகிதாசாரம் வேண்டும் எனக் கோருவது எந்த வகையில் நியாயம்? பழுதடைந்த அனைத்து மின் விளக்குகளும் திருத்தப்படவுள்ளன. திரு.அமிர்தலிங்கம் என்னிடம் வந்து தமிழ்ப் பிரதேச அபிவிருத்திக்கான கோரிக்கைகள் முன்வைத்து நிறைவேற்றிச் சென்றமையை இவ்வளவு விரைவாக மறந்து விடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த 28.12.2011இல் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் அவர் தான் பகிரங்கமாக, இனப்பாகுபாடற்ற கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் என்று பேசியவர் என்பதை உலகம் அறியும். அத்துடன் அண்மைக்கால பத்திரிகைகளில் வெளிவந்த மேயர் பற்றியதான தமிழ் மக்களின் கருத்துக்கள் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் இப்போதைய கூற்று பிழையானது என்பதை நிரூபிக்கும்.

கல்முனையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கடைத் தொகுதியை உரியவர்களுக்கு ஒப்படைப்பதற்காக திறந்த கேள்வி முறையில் பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டது. விளம்பரத்தின் அடிப்படையில் ஒரு தமிழ் மகன் கடையும் பெற்றுள்ளார். ஆனால் இது நாள்வரை வாய் திறக்காமல் இருந்து விட்டு இப்பொழுது திரு.அமிர்தலிங்கம் இனவிகிதாசார கோசம் எழுப்புவது ஏன்?

உறுப்பினர் திரு.அமிர்தலிங்கம், மேயர் என்ற முறையில் என்னை அணுகி தமிழ்ப் பிரதேச நடவடிக்கைகள் அனைத்தும் தனக்கூடாகவே நடைபெற வேண்டும் எனவும் ஏனைய உறுப்பினர்களை கலந்தாலோசிக்கத் தேவையில்லை எனவும் ஏனைய உறுப்பினர்களை கலந்தாலோசிக்கும் தேவையேற்பட்டால் அதையும் தன்னூடாகவே மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். ஏனைய தமிழ் உறுப்பினர்கள் என்னை நேரடியாக அணுகி தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதை அவர் விரும்பவில்லை.

தமிழ் இளைஞர்கள் ஆறு பேருக்கு மாநகர சபையால் வேலைவாய்ப்பு வழங்கியபோது தன்னை கலந்தாலோசனை செய்யாதது ஏன் என்று கேட்டார். தமிழ்க் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் வந்து தெரு மின் விளக்குப் பிரச்சினையொன்றைத் தெரிவித்தபோது பாதிரியார் குறிப்பிட்ட வீதியில் 10-15 மின்குமிழ்களை பொருத்த நான் உடனடி நடவடிக்கை எடுத்த போதும் அதனை ஆட்சேபித்து தனக்கூடாகச் செய்யுமாறு கேட்டார்.

மாநகர சபையில் எதிர்க் கட்சித் தலைவர் என்ற ஒரு பதவி கிடையாது. இதனை கல்முனை மாநகர சபையில் வைத்து கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நேரடியாகவே எம்மிடம் தெரிவித்தார். இது பற்றி திரு.அமிர்தலிங்கமும் அறிவார். இந்த நிலையில் அவரூடாகவே அனைத்தும் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே இப்போது அவர் எனக்கெதிராக இனவாதம் பேசுகின்றார் எனக் கருதுகின்றேன். இந்நிலை தொடருமானால் தன்னுடைய ஆதரவு கிடைக்காது எனவும் கூறியுள்ளார். அவரது ஆதரவு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் தமிழ் மக்களுக்கான எனது சேவையை வழங்கியே தீருவேன்.

கல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு மத்தியில் சுயாதீனமான முறையில் என்னைப் பற்றியும் எனது நடவடிக்கைகளைப் பற்றியும் விசாரித்தால் தமிழ்ப் பொது மக்கள் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நான் சேவை புரிவதை அவர்கள் தெளிவாகச் சொல்வார்கள்' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்