கல்முனை மாநகர சபையின் சுதந்திர தின நிகழ்வில் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற 64ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் குற்றஞ்சாட்டினார்.
இச்செயற்பாட்டினை கல்முனை மாநகர சபை நிர்வாகமே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற 64ஆவது சுதந்திர தின நிகழ்விற்கு பொதுமக்களினால் கல்முனை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மேயர், பிரதி மேயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த செயலானது கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட 11 பிரதேசங்களில் வாழும் முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ மற்றும் சிங்கள மக்களை புறக்கணிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சுதந்திர தின வைபவத்திற்கு அழைக்கப்படாததன் பின்னணி என்னவென்பது மறைமுகமாகவே உள்ளது.
இது மாத்திரமல்லாமல் நிர்வாக ரீதியாக இடம்பெறும் நிகழ்வுகளுக்கும் கூட இறுதி நேரத்திலேயே அழைப்பு விடுக்கப்படுகின்றது.
அத்துடன் மாநகர சபை உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கும் உப குழுக்களை ஒழுங்குமுறையாக ஏற்பாடு செய்யும் சகல நடவடிக்கைகளுக்கும் கல்முனை மாநகர சபை நிருவாகம் அசமந்த போக்கினையே கடைப்பிடித்து வருகின்றது".
Comments
Post a Comment