பாண்டிருப்பில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு அரசடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள இரும்புத் தொழிற்சாலையிலிருந்து வெட்டுக் காயங்களுடன் இளைஞரொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தொழிற்சாலையில் உறங்கிக்கொண்டிருந்த காவலாளியும் கடும் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாண்டிருப்பு இரண்டாம் பிரிவைச் சேர்ந்த இரும்புத் தொழிற்சாலை உரிமையாளரின் புதல்வரான சுந்தரலிங்கம் ரஞ்சித் (வயது 17) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை, ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த உதயன் என்ற காவலாளியே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;.
நேற்று சனிக்கிழமை இவர்கள் தமது இரும்புத் தொழிற்சாலையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தனது தொழிற்சாலைக்கு வந்திருந்த அத்தொழிற்சாலையின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார் இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், வெட்டுக்காயங்களுக்குள்ளான காவலாளியையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment