யார் மேயர் ?சாய்ந்தமருதில் தொடரும் அமைதியின்மை



கல்முனை மாநகர மேயராக அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்படவில்லை என்று வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து சாய்ந்தமருது நகரில் ஹர்த்தால் இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
உச்சபீட உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் புதிய முகத்தை விட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பரே மேயர் பதவிக்கு நியமிக்ககப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிராஸ் மீராசாஹிப், நிசாம் காரியப்பர் ஆகியோருடன் தான் பிரத்தியேகமாக கலந்துரையாடியதன் பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்த தலைவர் ரவுப் ஹக்கீம் உச்சபீடக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். எனினும் சிராஸ் மீராசாஹிப் மேயராக நியமிக்கப்படவில்லை என்று வெளிவந்த தகவலைத் தொடர்ந்து சாந்தமருது பிரதான வீதிக்குத் திரண்ட அவரது ஆதரவாளர்கள் டயர்களை எரித்தும் வீதித் தடைகளை ஏற்படுத்தியும் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கத்துக்குச் சொந்தமான புதிய கட்டிடத் தொகுதியில் இயங்கி வருகின்ற கொம்டெக் உயர் கல்வி நிறுவனம் கடுமையாகத் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்..ஜெமீல் இக்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நிசாம் காரியப்பருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் எனத் தெரிவித்தே இவரது நிறுவனம் தாக்கப்பட்டிருக்கிறது.

அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேட கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் படையினரின் அடிதடியைத் தொடர்ந்து சற்று தணிந்தது. அதேவேளை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் கொழும்பில் இருந்தவாறு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உரையாற்றினார்.

"மு கா தலைமைத்துவம் இன்னும் எத்தகைய தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை. நாளை நமக்கு சாதகமான முடிவை அறிவிப்பார் என நம்புகிறேன். ஆகவே வன்முறைகள் குழப்பங்களில் ஈடுபடாமல் கலைந்து சென்று வீடுகளில் உறங்குமாறு மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைதி நிலை ஏற்றபட்டது. எனினும் சாய்ந்தமருது நகரம் எங்கும் பொலிசாரும் படையினரும் குவிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எம்.எஸ்.சிராஸை கல்முனை மாநகரசபை  முதல்வராக அறிவிக்குமாறு வலியுறுத்தி சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று புதன்கிழமை  அரசாங்க நிறுவனங்களும் வியாபாரஸ்தாபனங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் சாய்ந்தமருது பிரதேசத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டதுடன் அப்பிரதேசத்தின் பாடசாலைகள், அரச அலுவலகங்கள், தனியார் வியாபார நிலையங்கள் போன்றனவும் மூடப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்