ஐ.தே.கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணையும் சாத்தியம்



ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் மற்றும் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா ஆகியோரே ஆளும் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களித்த ரங்கா, தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட்ட போதும் புரவசி பெரமுன என்ற கட்சியை சேர்ந்தவன் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே ரங்கா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த போதும் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பரிந்துரையின் பேரில் நுவரெலிய மாவட்டத்தில் அவர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த நிலையில் ரங்காவின் தற்போது அறிவிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி தொலைக்காட்சியும் அதன் நிறுவனமான மகாராஜா நிறுவனமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் காரணமாகவே ரங்காவுக்கு அவர் தமது கட்சி பட்டியலில் இடமளித்தார். எனினும் அவர் உடனடியாக கட்சிக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்துள்ளமை ரணிலுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காதர், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு அதிக இடம்கொடுத்துவிட்டதாக கூறியே ஆளும் கட்சியில் இணையும் எதிர்வை தெரிவித்து வருகிறார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அதிகளவான அக்கறையை காட்டவில்லை.
ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்கவும் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் நடத்திய சந்திப்பின் போது இது தொடர்பில் இருவருக்கும் இடையில் உடன்பாடு ஒன்று கொள்கையளவில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்