மே 17 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு த.தே.கூ கோரிக்கை


  வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஷ்டிப்பைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளினாலும் போரினாலும் பெரும்தொகையானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வேறு பல பாரிய பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். பெருந்திரளானோர் வீடுகளிலும் இருப்பிடங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

2006 நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காலப்போக்கில் விரிவடைந்து, வன்னிப் பெருநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று இறுதிக்கட்டமாக கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் தொடக்கம் மே 18 ஆம் திகதி வரை உக்கிரமாக நடந்தது.

இந்த உச்சக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் இலட்சக்கணக்கானவர்கள் வேறு பல பாரிய பாதிப்புகளுடன் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பேரவலம் உலக சரித்திரத்தில் நடந்த பாரிய இப்பேரவலத்தை நினைவு கூரும் வண்ணமாக வருடா வருடம் துக்கதினமொன்றை கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் வேண்டுகின்றோம். இவ்வருடம் 2010 மே 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களøயும் சமயத் தலைவர்களையும் அன்பாக வேண்டுகின்றோம்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராசா,ந.சிவசக்தி, பா.அரியநேத்திரன், விநோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சி. யோகேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. பியசேன ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்