தேர்தல் முடிவுகள் : சிறுபாண்மை பிரதிநிதித்துவம் வீழ்சி கண்டுள்ளது.

விகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 20 தேர்தல் மாவட்ட முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகிவிட்டன. இம்முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 117 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 46 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 12 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 05 ஆசனங்களும் கிடைத்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மொத்தம் 196 பிரதிநிதிகளுள் 180 பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 34 வாக்கெடுப்பு நிலையங்களிலும், திருகோணமலையில் அமைந்துள்ள 01 வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதையடுத்து அகில இலங்கை ரீதியான பெறுபேறுகள் மற்றும் தேசியபட்டியல் பிரதிநிதிகள் விபரங்களும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.

இம்முறை தேர்தலில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தினையே வாக்காளர்களிடம் எதிர்பார்த்திருந்தது. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. 1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க. ஆறில் ஐந்து பாராளுமன்றப் பலத்தைப் பெற்றது. அச்சமயம் இலங்கையில் நடைமுறையிலிருந்த தேர்தல் முறை பெரும்பான்மை தேர்தல் முறையேயாகும். தமது அறுதிப் பெரும்பான்மை பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே 1982ம் ஆண்டில் ஐ.தே.க. மக்கள் தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 06 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொண்டது. விகிதாசார முறையின் கீழ் 1988, 1994, 2000, 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின்போது மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எந்தவொரு கட்சியினாலும் பெற முடியவில்லை. இக்கட்டத்தில் சிலசந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ளவும் கட்சிகள் போராடியதை அவதானிக்க முடிந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் ஜனாதிபதி இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தினை எதிர்பார்த்தது அபரிமிதமான எதிர்பார்ப்பு என்றாலும் பிழையாகாது.

இம்முறை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும்போது தற்போது வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணி 117 ஆசனங்களைப் பெற்று இலகுவாக அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை வென்றால் அது அறுதிப் பெரும்பான்மையாகிவிடும். இந்நிலையில் மேலும் 6 ஆண்டுகளுக்கு ஆளும் ஐ.ம.சு.முன்னணியால் நெருக்கடிகளின்றி அரசாங்க அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். தற்போது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவராத கண்டி மாவட்டத்தில் 08 பிரதிநிதிகளும், திருகோணமலை மாவட்டத்தில் 02 பிரதிநிதிகளும் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் ஆளும் கட்சியின் ஆசனப் பலம் 127ஆக அதிகரிக்கலாம். தற்போதை வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஆளும் கட்சிக்கு 17 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வாய்ப்புண்டு. அவ்வாறாயின் ஆளும் கட்சியின் பலம் 144ஆக அதிகரிக்கலாம். (முழுமையான முடிவுகள் வெளிவந்த பிறகு இந்த எண்ணிக்கை சற்று கூடிக் குறைய வாய்ப்புண்டு. எனவே, மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ள ஆளும் கட்சிக்கு 06 அல்லது 07 அங்கத்தவர்களே தேவைப்படலாம். )

கடந்த கால அனுபவங்களுடன் ஒப்புநோக்கும்போது இந்த சிறிய எண்ணிக்கையினை ஆளும் கட்சியினால் பெற்றுக் கொள்வது கடினமான செயல் என எதிர்பார்க்க முடியாது. எனவே, விரைவில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை தனதாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ஆளும் கட்சியினால் மூன்றிலிரண்டு பாராளுமன்றப் பலம் எதிர்பார்க்கப்பட்டதன் பிரதான நோக்கம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டேயாகும். குறிப்பாக ஆளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட இத்தகைய மாற்றங்களை மூன்று கட்டங்களின் கீழ் நோக்க முடியும்.

01. இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பினூடாக ஒரு தீர்வினை வழங்குதல். இவ்வாறு வழங்குமிடத்து சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தவிர்ந்து கொள்ள இடமுண்டு.

02. தற்போது இலங்கையில் காணப்படக்கூடிய தேர்தல் முறையில் மாற்றத்தினை ஏற்படுத்துதல். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எந்தவொரு ஆளும் கட்சியாலும் கூடிய பெரும்பான்மையினை தக்கவைத்துக் கொள்ள ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைய வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்ட நிலையை மாற்றியமைப்பது.

03. ஜனாதிபதி ஆட்சிமுறையினை மாற்றியமைத்தல். 1994ம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டுமென வாக்குறுதிகளை வழங்கியே வந்துள்ளனர். 2010ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளது 2ஆவது பதவிக்காலத்துக்காகும். அரசியலமைப்பு விதிகளின்படி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடிய ஒருவருக்கு 06 ஆண்டுகளைக் கொண்ட 02 பதவிக்காலங்களுக்கு மட்டுமே செயற்படலாம். எனவே, இத்தடவை ஜனாதிபதி இம்முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.
மேற்குறிப்பிட்ட 03 விடயங்களில் இனப்பிரச்சினைக்கான அரசியல் ரீதியான தீர்வென்பது விசாலமான ஆய்வுக் கருப்பொருளாகும். இது பற்றி மற்றுமொரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம். தவிர, தேர்தல் முறையினை மாற்றியமைத்தல் என்ற விடயத்தை எடுத்துநோக்குமிடத்து 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மை தேர்தல் முறையின் கீழே இலங்கையில் சகல தேர்தல்களும் நடைபெற்றுவந்துள்ளன. இத்தேர்தல் முறையின் கீழ் ஒரு தேர்தல் தொகுதியில் கூடிய வாக்குகளைப் பெற்றவர் பிரதிநிதியாக செயல்படுவார். இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர, ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மை சமூகத்தினர் வாழ்ந்தாலும்கூட, செறிவாக வாழ்வதில்லை. தொகுதி ரீதியாக நோக்குமிடத்து அவர்கள் பெரும்பான்மை சமூகத்தினருடன் இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். இதனால்தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர, ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி சோல்பரி யாப்பின் கீழ் இரட்டை அங்கத்தவர் தொகுதி அல்லது பல அங்கத்தவர் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. விகிதாசார முறையுடன் ஒப்புநோக்கும்பொழுது பெரும்பான்மை முறையின் கீழ் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய நிலை கணிசமாக உண்டு.

விகிதாசார தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளது என்பது உண்மை. இருப்பினும், விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் தமது பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிகழ்த்தகவு உண்டு. எனவேää தேர்தல் முறையை மாற்றியமைத்தல் எனும் போது தற்போதைய உத்தேச ஏற்பாடாக ஜெர்மனியில் காணப்படக்கூடிய தேர்தல் முறையினை ஒத்ததாக ஒரு முறையினை அறிமுகஞ் செய்யும் ஏற்பாடே காணப்படுகின்றது. குறிப்பாக அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறையில் 160 பிரதிநிதிகள் நேரடியாக தொகுதி வாரியாகவும் மீதமான பிரதிநிதிகள் மாவட்ட அல்லது தேசிய ரீதியாக வாக்குகள் பெறக்கூடிய விகிதாசாரத்துக்கமைய விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்படலாம் எனக் கருதப்படுகின்றது.

கடந்த தேர்தலுடன் ஒப்புநோக்கும்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். நடைபெற்ற தேர்தலின்படி கொழும்பு மாவட்டத்தில் ஆளும்.ஐ.ம.சு.முன்னணி சார்பில் ஏ.எச்.எம். பவுஸியும், ஐ.தே.முன்னணி சார்பில் பிரபா கணேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான், வி. ராதாகிருஸ்ணன், பி. ராஜதுறை ஆகியோரும், ஐ.தே.மு. சார்பில் பி. திகாம்பரம், ஜெயரத்னம் ஸ்ரீரங்கா ஆகியோர் உட்பட ஐவர் தெரிவாகினர். யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேம்சந்திரன், அப்பாதுறை விநாயகமூர்த்தி, பீ.சரவனபவண், சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும், ஐ.ம.சு.மு. சார்பில் டக்ளஸ் தேவானந்தா, சிலுவெஸ்திரி உதயன், முருகேசு சந்திரகுமார் ஆகியோரும், ஐ.தே.மு. சார்பில் விஜயகலா மகேஸ்வரனும் தெரிவாகியுள்ள அதேநேரத்தில், வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் அ. அடைக்கலநாதன், எஸ். நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ஐ.ம.சு.மு. சார்பில் அப்துல் ரிஸாத் பதியுதீன், ஜுனைஸ் பாரூக் ஆகியோரும் ஐ.தே.மு. சார்பில் நூர்டீன் மசூரும் தெரிவாகியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் ஐ.தே.முன்னணி சார்பில் கபீர் ஹசீம் தெரிவாகியிருந்தார்.

திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஐ.தே. முன்னணியில் எம்.எச்.எம். ஹரீஸ், பைசல்காசிம் ஆகியோர் வெற்றிபெற்றனர். இம்மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றியீட்டியுள்ளவர் பீ.எச்.பி.பியசேன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சீனிதம்பி யோகேஸ்வரன், பொன்னம்பலம் செல்வராசா, அரியநேத்திரன் பாக்கிய செல்வம் ஆகியோரும், ஐ.ம.சு.மு. சார்பில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும், ஐ.தே.மு. சார்பில் பசீர சேகு தாவூத் தெரிவாகியுள்ளனர்.

அதேநேரம், கம்பஹா, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை குருணாகல், புத்தளம், பொலனறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியாவது தேர்ந்தெடுக்கப்படாமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உத்தியோகபற்றற்ற தகவல்களின்படி ஆகக்கூடிய வாக்குகளைப்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனஸ் ஆசனத்தையும் சேர்த்து இரண்டு ஆசனங்கள் கிடைக்குமெனவும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் இரண்டு ஆசனங்களும் விருப்புவாக்குகளில் முன்னணியில் நிற்கும் அமைச்சர் புஞ்சிநிலமே, எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருக்குக் கிடைக்கலாம் என்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய ஆசனம் எம்.எஸ்.தௌபீக்குக்கு கிடைக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குரிய ஆசனம் அதன் முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தனுக்கு கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நான்கு உறுப்பினர்களுள் இரண்டு உறுப்பினர்கள் பெரும்பான்மை சமூகத்திலிருந்தும் மீதமான இரு உறுப்பினர்களும் சிறுபான்மை சமூகத்தினரிலிருந்தும் தெரிவாக்கப்படுகின்றனர்.

கண்டி மாவட்டத்திலும் தேர்தல் முடிவுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு எட்டு ஆசனங்களும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஆளும் ஐ.சு.மு. சார்பில் பைசர் முஸ்தபாவும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரவூப் ஹக்கீம், அப்துல் காதர், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் 34 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முடிவு சிலநேரங்களில் மேற்குறிப்பிட்ட முடிவினை மாற்றியமைக்கலாம். எவ்வாறாயினும் 12 அங்கத்துவர்களைக் கொண்ட கண்டி மாவட்டத்தில் 4 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஊகிக்கப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், ஆளும். ஐ.ம.சு.முன்னணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை வைத்து தேர்தல் முறையினை மாற்றியமைக்க முற்படுமிடத்து தெரிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் கட்சி, இன வேறுபாடுகளுக்கப்பால் நின்று சிறுபான்மையினரின் நலவுரிமையினைப் பேணக் கூடிய வகையில் நடக்க வேண்டியது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதிய ஒரு தூரதிருஸ்டி பயணத்தின் முதற்படியாக இருக்கலாம். குறிப்பாக தொகுதி வாரியான தெரிவு முறைக்கப்பால் விகிதாசார முறையில் கட்சிகள் பெறக்கூடிய வாக்கு வீதத்துக்கமைய தெரிவு செய்யப்படக்கூடிய பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் இவர்கள் கூடிய ஆர்வமிக்கவர்களாக இருத்தல் வேண்டும். 2010 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் போட்டியிட்டாலும்கூடää இரு கட்சி முறை மாதிரிக்கமையவே தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. இதனை கூடிய கரிசனையில் கொள்ளுதல் வேண்டும்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு முடிவுகளை அவதானிக்கும்போது இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு அவசியமில்லை என்ற நிலை உருவாக்கம் பெற்றது. பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை மிகவும் ஆழமான முறையில் மீளாய்வு செய்வோமாயின் இலங்கையில் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் சிறுபான்மையினர் அவசியமில்லை என்ற ஒரு நிலையே மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்கு தற்போது அழுத்தமான முறையில் கவனத்திற் கொள்ளப்படாவிடின் எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகள் பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவே திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

எனவே, தெரிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் தத்தமது சுயநல நோக்குகளை மாத்திரம் கருத்திற் கொள்ளாது அல்லது நாட்டின் அரசியல் நிலைமைகளுக்கப்பால் சென்று வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கமைய செயல்படாது இருக்க வேண்டியது ஒரு கட்டாயக் கடமையாகின்றது. மாறாக தத்தமது அமைச்சுப் பதவிகளையும் அல்லது தத்தமது சுயநல நலன்களையும் மாத்திரம் கருத்திற் கொண்டு இவர்கள் நடப்பார்களாயின் எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது சிறுபான்மை சமூகத்தினர் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வரலாற்று உண்மைக்கு இவர்கள் காலத்தால் பதில் அளித்தே ஆக வேண்டும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்