2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒழுங்கு விதிகள்
இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கென ஒரு கோடி 60 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இந்தமுறை வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2019 ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் வாக்களிக்க வேண்டிய நிலையம் குறிப்பிடப்பட்டிருக்கும். அட்டையில் குறிப்பிடப்பட்ட நிலையங்களுக்கு சென்று வாக்கினை அளிக்க வேண்டும். வேறு நிலையங்களில் வாக்கினை அளிக்க முடியாது.
போட்டியிடும் 35 வேட்பாளர்களுள் விருப்பமான ஒருவருக்கு ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாக்கை செலுத்தலாம். வாக்களிப்பின் போது வேட்பாளரின் கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இட வேண்டும். அல்லது 1 என்ற இலக்கத்தை குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது தெரிவுக்கு நேரே 1 என்றும் ஏனைய இரு தெரிவுகளுக்கும் 2,3 என்று குறிப்பிட வேண்டும்.
புள்ளடியிட்டால் அந்த வாக்கை ஒருவருக்கு மட்டுமே வழங்க முடியும். புள்ளடியிட்ட பின்னர் 2 ஆவது மற்றும் 3 ஆவது விருப்பத்தை அளிக்க முடியாது. அவ்வாறான வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காக கருதப்படும். வாக்களிக்கும் போது ஏதாவது தவறு ஏற்படுமிடத்து மற்றொரு புதிய வாக்குச்சீட்டைப்பெற்று மீண்டும் வாக்கினைச் செலுத்த முடியும்.
Comments
Post a Comment