கிழக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் அழிக்கப்படும்
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு
கிழக்கு முஸ்லிம்கள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்புடன் சர்வதேச பயங்கரவாதம் வெகு விரைவில் முடிவுக்கு வரும். இதற்காக அரச படைகளுக்கு ஜம்மியத்துல் உலமா உட்பட நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என உள்ளூராட்சி மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்களின் புனித தினத்தன்று ஈனச் செயல் புரிந்த தற்கொலைதாரிகள் குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கையை கண்டித்தும் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம் பெற்ற தற்கொலை சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்தார் .
இந்த ஊடகவியலாளர் மாநாடு கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது . இந்த ஊடக மாநாட்டில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரகீப் கலந்து கொண்டார்
அங்கு தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கும் போது இலங்கையில் இரண்டு வருடமாக இந்தப் பயங்கரவாதிகளின் பெயர் வீசப்பட்டது ஆனால் இவ்விடயத்தில் நமது நாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டனர் இன்று பாரிய நெருக்கடிக்கு அரசாங்கமும் நாட்டு மக்களும் முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது . இருந்த போதும் எமது இராணுவத்துக்கு எமது நாட்டு முஸ்லீம் மக்கள் விசுவாசமாக இருந்து இந்த பயங்கர வாதிகளை ஒழிப்பதில் அக்கறை செலுத்தி வருகின்றனர் . சம்மாந்துறையில் பாரிய ஆயுத கிடங்கு, சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குத்தலுக்கு தயாரானவர்கள் அழிக்கப்பட்டமை, நிந்தவூரில் வெடிபொருள் உற்பத்தி செய்யும் இடம் போன்ற இடங்களை அப்பகுதி முஸ்லீம் மக்களே இராணுவத்துக்கு தகவல் வழங்கி அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர் .
அண்மையில் சர்வதேச பயங்கர வாதிகளின் தாக்குதல் நடை பெற்றபின்பு அவை தொடராமல் தடுக்கப்படுவதற்கு முஸ்லீம் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என இராணுவ தளபதி கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிலர் அரசியல் காய் நகர்தல்களில் ஈடுபடுகின்றனர் .
எதிர்காலத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்ட்ங்களுக்கு நாம் மதிப்பளித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் .புர்காஹ் விடயமாக இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுவான முடிவை எடுத்துள்ளது இதனை எமது முஸ்லீம் சகோதரிகள் முன்னெடுத்து தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்
இந்த நாட்டில் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றனர் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடந்த கால யுத்த வடுக்களை அனுபவித்தவர்கள் அதனால் பயங்கவாதத்துக்கு எமது மக்கள் துணைபோகமாட்டார்கள் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடன் இந்தப்பயங்கரவாதம் வெகு விரைவில் முடிவுக்கு வரும் இதற்காக துரித நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கும் பயங்கர வாதத்தை முற்றாக இந்த நாட்டிலிருந்து அழிப்பதற்கு ஓன்று பட்டுள்ள முஸ்லீம் அரசியல் தலைமைத்துவங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்
Comments
Post a Comment