தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தை முற்றாக தடைசெய்ய வேண்டும்
ஜனாதிபதியிடம் சு.க. கோரிக்கை
நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பையும் அதற்கு அனுசரணை வழங்கியுள்ள அனைத்து சக்திகளையும் அவசரகால சட்டத்தின்கீழ் பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இந்த அமைப்பை தடைசெய்யும்போது அவர்களுடைய ஆயுத பாவனை, உரைகள், ஆட்சேர்ப்பு, வகுப்பு எடுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ள வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படாலும் இந்த செயற்பாடுகள் யாவும் மிகவும் ஆழமான முறையில் கையாளப்பட வேண்டும் என்றும் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.
இந்த அமைப்பு தொடர்பில் 2013 இல் அறியப்பட்டாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே இதற்கு அவசியமான வகையில் சட்டத்திலும் திருத்தங்கள் முன்னெடுனக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்திலும் இந்த அமைப்பை தடை செய்ய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை ஜனாதிபதிக்கு அறியத்தந்திருந்தால் அவர் உடனடியாக நாடு திரும்பியிருப்பார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொடர்பாடல் குறித்து பாரிய இடைவெளி இருப்பது இதன்மூலம் தெட்டத்தெளிவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்தல்
"பத்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் மதரீதியான பயங்கரவாதமொன்றுக்கு முகம் கொடுத்துள்ளோம். இது வெளிநாட்டைச் சேர்ந்த அமைப்பொன்று திட்டமிட்டு செய்துள்ளமை தெட்டத் தெளிவாகியுள்ளது.
மிக சிறியளவிலான இலங்கை முஸ்லிம்களே இந்த அமைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் நாம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து இச்சவாலுக்கு முகம் கொடுக்க முன்வர வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை பிரிவினை வாதத்துக்கான பயங்கரவாதிகளையே நாம் சந்தித்திருந்தோம். ஆனால் தற்போது நாட்டில் இடம்பெற்றிருக்கும் தாக்குதல்கள் யாவும் மதரீதியிலான அடிப்படை வாதிகளால் ஏற்படுத்தப்பட்டவை. சர்வதேச அமைப்பொன்று இலங்கையர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. நாம் ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவதை விடுத்து இச்சம்பவம் ஏன் நடந்தது? இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? மீண்டும் இதுபோன்றதொரு சம்பவம் இலங்கையில் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்.
Comments
Post a Comment