கல்முனையில் நடைபெற்ற 71வது சுதந்திர தின நிகழ்வு
கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வு இன்று (4) திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, கல்முனை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி. ஹேரத், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநெத்தி, மேஜர் தர்மசேன, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கல்முனை மாநகர சபை செயலாளர் எம். பிர்னாஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மத குருக்கள், மௌலவிமார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து ஆரம்பித்துவைத்த இச்சுதந்திரதின நிகழ்வின்போது அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.
இவ்வணிவகுப்பு மரியாதை தொடரணியில் பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையினைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்தியக் குழுக்கள் மற்றும் சாரணர் குழுக்கள், இஸ்லாமிய பாரம்பரிய கலை பொல்லடிக் குழு, பாவாமார்களின் ரப்பான் குழு, ஜாமியா மன்பயில் ஹிதாயா அறபுக் கல்லூரி மாணவர் குழு, கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குழு, கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க குழு, கல்முனை மாநகர சபை ஊழியர்கள் குழு ஆகியனவும் கலந்துகொண்டன.
இம்முறை என்றுமில்லாதவாறு விஷேட ஏற்பாடுகளுடன் கல்முனையில் நடைபெற்ற 71 வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு மரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
நாட்டு பற்றையும் அபிமானத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இச்சுதந்திர தின நிகழ்வு அமைவதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார். இன, மத, பிரதேச வேறுபாடின்றி எல்லோரும் ஐக்கியமாக இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அர்பணிப்புடன் செயற்படுவதோடு நாட்டைக் கட்டியெழுப்ப கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment