பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு


மட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 
இவர் வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு பெண் உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர் என தெரிவிக்கப்படுகின்றது. 
மீன் பிடித் தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்றிருந்தார். 
எனினும் அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இதன் காரணமாக நேற்று (21) இச்சம்பவம் குறித்து வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. 
இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களுமாகத் தேடியும் காணாமல் போனவரைப் பற்றிய எதுவித தடயங்களும் கிடைத்திருக்காத நிலையில் இன்று காலை தட்டுமுனை ஆற்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
இவர் வலிப்பு நோய்க் குணம் உள்ளவர் என்று தெரிவித்த உறவினர்கள், சேறும் சகதியுமான ஆற்றில் வலை கட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக வாவியில் வீழ்ந்து சேற்றில் புதையுண்டிருக்கலாம் என ஊகம் தெரிவித்துள்ள நிலையில் பொலிஸார் இச்சம்பவம் பற்றிய விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 
சடலம் உடற்கூறாய்வு சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக வாகரை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்