தோட்டத் தொழிலாளர் சம்பளம்; கொடுப்பனவுகள் சகிதம் ரூ.855 ஆக அதிகரிப்பு
கடந்த நான்கு மாதங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த கூட்டுஒப்பந்தப் விவகாரம், இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூபா 700 அடிப்படைச் சம்பளத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைச் சம்பளமாக ரூபா 700, விலைக் கொடுப்பனவு ரூபா 50, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியமாக ரூபா 105 என்ற அடிப்படையில், மொத்தச் சம்பளம் ரூபா 855 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்து ஒரு கிலோவுக்கு தலா ரூபா 40 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், இது வரை ரூபா 500 (கொடுப்பனவு உள்ளிட்டு ரூ. 530) ஆக காணப்பட்டதோடு, அதில் ஊழியர் சேமலாப நிதியத் தொகையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில், இன்று (25) இடம்பெற்றது.
இன்றைய பேச்சுவார்த்தையில், தொழில் அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் மத்தியஸ்தம் வகிக்க, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் கலந்துகொண்டன.
இதன்போது, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், அரசாங்கம் சார்பில் புதிய முன்மொழிவை முன்மொழிந்துள்ளனர்.
அடிப்படைச் சம்பளமாக ரூபா 700, விலைக் கொடுப்பனவு ரூபா 50, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியமாக ரூபா 105 என்ற அடிப்படையில், மொத்தச் சம்பளம் ரூபா 855 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்து ஒரு கிலோவுக்கு தலா ரூபா 40 வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகளுக்கு, இருதரப்பும் இணங்கியுள்ளன.
மேலும் தொழிலாளர்களுக்கு, நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் அரசாங்கமும் கம்பனிகளும் முன்வந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரைக்கான நிலுவைக் கொடுப்பனவு, தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்ற நாள்களை அடிப்படையாக வைத்து வழங்கப்படவுள்ளன.
Comments
Post a Comment