இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அபிவிருத்திப் பணிகள் அம்பாறையில் ஆரம்பம்


(அகமட் எஸ்.முகைடீன், றியாத் ஏ. மஜீத்) 

குடுவிலில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸினால் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குடுவில் அமைப்பாளர் எம். சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெமீல் காரியப்பர், எம். முஸ்மி, எம். நைசர், நிர்மலா மற்றும் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் யூ.கே. ஜபீர் மௌலவி உள்ளிட்ட பிரதேசவாசிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்தபோது அவரின் பணிப்புரைக்கு அமைவாக அவ்வமைச்சின் கீழுள்ள இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபன இறக்காம தொழிற்சாலைக்கு சொந்தமான குடுவில் பிரதேசத்திலுள்ள 4 ஏக்கர் காணி அப்பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்டது. 

அக்காணியின் பற்றைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தை தான் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்த பின்னரான முதலாவது அபிவிருத்தி வேலைத்திட்டமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இப்புதிய மைதானத்தை அமைப்பதற்கு ஏற்றவகையில் தனக்கு தற்போது கிடைத்துள்ள உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அமைந்துள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இம்மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பார்வையாளர் அரங்கு மற்றும் சுற்று மதில் உள்ளிட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக இதன்போது தெரிவித்தார். 

குடுவில் பிரதேசத்தில் அமைக்கப்படும் இவ்விளையாட்டு மைதானத்தினால் குடுவில், நல்ல தண்ணி மலை, மாணிக்கமடு, அறபாநகர் போன்ற பிரதேசத்தைச் சேர்ந்த சகல இன மக்களும் பயனடையவுள்ளனர். இப்பிரதேசங்களில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மக்கள் குடியிருக்கின்ற போதிலும் இளைஞர்களிள் விளையர்டுத்துறையினை வளப்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டு மைதானம் இன்மை பாரிய குறைபாடாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

அவ்வாறான நிலையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் வாக்குறுதியளிக்கப்பட்ட குடுவிலுக்கான புதிய விளையாட்டு மைதானம் அமைக்கும் வேலைத்திட்டம் கனவாக மாறிவிடுமோ என்ற ஏக்கத்திலிருந்த இப்பிரதேசவாசிகள் இராஜாங்க அமைச்சராக ஹரீஸ் பதவிப்பிரமாணம் செய்த கையோடு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமையினையிட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டழுது இராஜாங்க அமைச்சரின் நீண்ட ஆயுளுக்காக இதன்போது பிரார்த்தித்தனர். 




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது