கடும்போக்கை கைவிட்டால் மஹிந்தவல்ல, எந்த மாப்பிள்ளைக்கும் மாலைகட்ட தயார்!!!
சுகைப் எம்.காஸிம்
புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப் புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இது. மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின் சுருக்கம்.தேசிய அரசியலில் ஏற்பட்ட இழுபறிக்குள் சிறுபான்மை அரசியற் கோட்பாடுகளே முதலாவதாக சிக்கிச் சிதறின.
பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்களில், தேசிய கட்சிகளுடனுள்ள உறவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு சிறுபான்மைக் கட்சிகளும் செயற்பட்டமை பலரது அவதானத்தையும் ஈர்த்தது. சமூக அபிலாஷைகள் பாதிப்புற்றாலும் இக்கட் சிகளுடனுள்ள மரபு வழி உறவுகள் பாதிக்கப்ப டக் கூடாதென்பதிலே காய்கள் நகர்த்தப்பட்டன.
இதிலிருந்த கவனம் சில தலைவர்களை ஐ.தே, கட்சியின் அடிமட்டத் தொண்டனாகத் தரமிறக் கியதையும் புயலுக்குள் துலங்கிய மின்னல்கள் காட்டின. மஹிந்த தரப்பு விசுவாசிகள் கடும் போக்கிற்குச் சார்பான சமூக உரிமைகளையும், ரணில் தரப்பு விசுவாசிகள் மிதவாதப் போக்கிற்குப் பொருத்தமான சிறுபான்மை அபிலாஷைகளையும் முன் நகர்த்தினர்.
இக்கட்சிகள் மரபு வழி உறவுக்கு வழங்கிய முக்கியத்துவங்களால் சமூக உரிமைகள் வீழ்ந்து கிடந்ததையும், புயலில் பளிச்சிட்ட பல மின்னல்கள் புலப்படுத்தின.
இவர்களின் இக்கோரிக்கைகளை சிங்களத் தலைமைகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பதை இக்கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னரே அளவிட முடியும்.முஸ்லிம் விரோதப் போக்கு மீண்டும் தலையெடுக்கக்கூடாது என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தமிழரின் அபிலாஷைகள் வீழ்த்தப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்ட மைப்பும் ரணிலை ஆதரித்திருக்கும்.
பிரிவினைவாதத்தை வீழ்த்தி புலிகளின் சிந்தனைகளை தோற்கடிக்க தேசிய காங்கிரஸும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் மஹிந்தவின் நிழலில் நின்றிருக்கும்.எனினும் அதிகாரங்களைக் கையேற்கும் வியூகங்களே இந்த அரசியல் புயலுக்குள் சுழன்றடித்ததை, காற்றில் கலந்த வாடையில் நுகர முடிந்தது.
வடக்குக் கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தெற்கிலுள்ள சகோதரர்களுக்கு தமது நிலைப்பாடுகள் குறித்து அதிகம் விளக்க வேண்டிய,தருணத்தையே இப்புயல் கிளப்பியுள்ளது.குறிப்பாக தெற்கிலுள்ள முஸ்லிம்களுக்கு கிழக்கின் களவிளக்கம் விளக்கப்பட வேண்டும்.முஸ்லிம் காங்கிரஸும் , மக்கள் காங்கிரஸுமே இதன் விரிவுரையாளர்களாக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கிழக்கில் கோரப்படும் தனியலகு அல்லது ஏதோவொரு அரசியல் அதிகாரம் தெற்கு முஸ்லிம்களை அச்சுறுத்துவதையும் இக்கட்சிகளின் தனித்துவ கோட்பாட்டு அரசியலை அலட்சியப்படுத்தியதையும் இப்புயலில் முழங்கிய இடியோசைகள் இடித்துரைத்தன.
”எப்போதும் மஹிந்த வேண்டாம் என்ற நிலைப் பாட்டில் நாங்கள் இல்லை.” இப்போதைக்கு வேண்டாம் என்பதே ரணிலுடனுள்ள முஸ்லிம் தலைமைகளின் தர்க்கம். ஆனால் தெற்கு முஸ்லிம்களின் களக் கொதி நிலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையி லான அரசாங்கம் வாழ் நாளிலும் வேண்டாம் என்ற இரைச்சலை இப்புயலுக்குள் புகுத்தியிருந்தது. எனினும் களுத்துறை மாவட்டத்தில் ஒரு சில முஸ்லிம் ஊர்கள் இன்னும் தமது தலையில் இடிவிழ வேண்டும் என்பதற்கே இப்புயலில் முழக்கத்தையும் மின்னலையும் எதிர்பார்த்தன.
சமூக அபிலாஷைகளை புதிய யாப்பிலாவது அடையாளம் காணலாமென்ற நம்பிக்கையே மக்கள் காங்கிரஸையும், முஸ்லிம் காங்கிரஸையும் ரணிலின் பக்கம் நிலைப்படுத்தியது. இதை இக்கட்சிகளின் மூச்சுக்களில் எழும்பிய காற்றலைகள் காட்டிற்று. எனவே அதிகார அலகுகள்,அல்லது நிர்வாக ரீதியான பிரிவினை அலகுகள், தங்களது வாழ்வுக்கு ஆபத்தாகலாம் என்ற தெற்கிலுள்ள முஸ்லிம்களின் அச்சத்தை அகற்றுவதே தேசிய தலைமையாவதற்கான இவர்களுக்குள்ள தகைமைகள். அல்லது சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு இணங்கிச் செல்கின்ற சிங்களத் தலைமைகளைப் பலப்படுத்துவதே இக்கட்சிகளின் நோக்கம்.
காலமாற்றத்தில் தேசிய அரசியல் மாற்றம் அடைந்தாலும், இணங்கிச் செல்லும் அரசியலுக்கு இணங்கி கடும்போக்கை கைவிட்டால் மஹிந்தவல்ல,எந்த மாப்பிள்ளை என்றாலும் மாலை கட்டத்தயார். இந்நிலையில் இக்கட்சிகள் .சிறுபான்மைத் தலைமைகளின் இந்த யதார்த்தங்களைப் புரிய மறுக்கும் தெற்கு முஸ்லிம்களின் ஐ.தே, கட்சியே வேண்டுமென்ற விடாப்பிடி,வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாது? இவ்வுண்மையை ம.காவும், மு.கா.வும் தெற்கு முஸ்லிம்களுக்குப் புரிய வைப்பதிலே இவர்களின் தேசிய தலைமைக்கான அங்கீகாரமுள்ளது. இதே போன்றுதான் மஹிந்தவே வேண்டு ம் என்ற விடாப்பிடியில் தேசிய காங்கிரஸ், ஈபிடிபி உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் புயலுக்குள் சிக்கித் தவித்தன.இக்கட்சிகளதும் மனநிலை தெற்கு முஸ்லிம்களைப் போன்றதாகவே இப்புயலில் பளிச்சிடுகிறது.ரணிலை வாள் நாளிலும் வேண்டாம் என்ற விரதம் பூண்டுள்ள இத்தலைமைகளின் போக்குகள் ஒரு பக்கச் சார்புக்கான இடியோசைகளாகக் காதுகளைப் பிளந்தன. அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நண்பருமில்லை.
புதிய அரசியலமைப்பு நாட்டைப்பிளவு படுத்தும் என்ற மஹிந்தவின் பெரும்பான்மைவாத நிலைப்பாடுகள் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மொழியினர் எவருக்கும் தீர்வைத் தராது.
புதிய அரசியலமைப்புக்கான நகர்வில் முஸ்லிம்களுக்குத் தேவையான காப்பீடுகளை உள்வாங்குதல் தொடர்பான ஆலோசனைகளையாவது மஹிந்த தரப்பு சிறுபான்மைத் தலைமைகள் முன் நகர்த்தியிருக்க வேண்டும். மாறாக இப்புயலைச் சூழ்ந்திருந்த மஹிந்த தரப்பிரலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் மௌனங்கள் (இருட்டு) இன்னும் வெளுக்காத வானங்களாகவே உள்ள தை, அவதானிக்கும் போது, இது புயலா? மழையா? அல்லது வெறும் இருட்டா??? என்பதை ஆருடம் கூறவே முடியாதுள்ளது.
Comments
Post a Comment