அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து (24) தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதனால் பெரும்போக நெல் அறுவடை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருவதனால் மாவட்டத்தின் நெல் அறுவடை  பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தற்போது வரை 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் பெரும்போக  அறுவடையில் பெருந்தடங்கல்  ஏற்பட்டுள்ளதோடு மழை தொடரின் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பாலமுனை நிந்நவூர் சம்மாந்துறை இறக்காமம்,  சடயந்தலாவ சவளக்கடை நற்பிட்டிமுனை  பிரதேச விவசாயிகள் மழைத்தாக்கத்தால் அறுவடைத்தாமதத்தையும்.நஷ்டத்தையும் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்போகம் மாத்திரமல்ல கடந்தாண்டுகளில் கூட  அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு  தொடர்ந்தும் இந்நிலை ஏற்பட்டு வருவதை நாம் காணுகிறோம்.
பல கண்டங்களில் அறுவடையும் குறைந்து நெல்லின்விலையும் குறைந்துள்ள நிலையில் மழையும் பாதிப்பை ஏற்படுத்தின் நெற்செய்கைக்கு இடப்பட்ட மூலதனத்தின் நிலை என்னவாகுமோ எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி மற்றும் பசளைத் தட்டுப்பாடு காரணமாக, நெல் அறுவடையில் 30 வீதமான வீழ்ச்சி ஏற்படுமென விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்