வடக்கு,கிழக்கில் 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று கனத்த மழை
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம் நகர்வு
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நகர்ந்ததையடுத்து நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசும் எனவும் கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பும் 90 முதல் 100 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இவற்றினூடான அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
இதுவரை இலங்கையில் சுனாமி ஏற்படுமென்ற சாத்தியக்கூறுகள் பெருமளவில் கிடையாது என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்:
வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கைக்கு கிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்திலேயே தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இது படிப்படியாக பலம் பெற்று இலங்கைக்கு நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. காங்கேசன்துறை, பொத்துவில், காலி, ஹம்பாந்தோட்டை பிரதேச கடற் பகுதியில் காற்று மணித்தியாலத்திற்கு 70 மீற்றர் வேகத்தில் வீசும்,அதேவேளை கடல் கொந்தளிப்பும் ஏற்படும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்வது முக்கியமாகும்.
நிலப்பரப்புத் தொடர்பில் நோக்கும் போது வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாணங்களில் இன்றைய தினம்(06) காற்றின் வேகம் அதிகரிக்கும். அத்துடன் மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மலையக பிரதேசங்கள் மற்றும் கிழக்கின் அம்பாறை பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும். மழை வீழ்ச்சி உடனடியாக எதிர்பார்க்க முடியாதெனினும் இரண்டொரு தினங்களில் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். அது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அவ்வப்போது தகவல்களை வெளியிடும். தற்போது வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் எந்த நேரத்திலும் மழை பெய்யலாம். இப்பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
வானிலை அவதான நிலையமானது இதுவரை சுனாமி எச்சரிக்கையை விடுக்கவில்லை. குறிப்பாக இந்தோனேசிய கடல் வலயத்தில் அல்லது பாகிஸ்தானின் மக்கோன் சோன் பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டால் மாத்திரமே எமக்கு சுனாமியின் பாதிப்பு ஏற்படும் சாத்தியமுண்டு.
தற்போது அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை நிலையமானது அதன் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களுக்கூடாகவும் இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள இது தொடர்பான நிறுவனங்களும் அதற்கான அறிவுறுத்தல்களை எமக்கு விடுக்கும். பூமியதிர்ச்சியினால் சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக மேற்படி நிறுவனங்கள் எமக்கு அறிவித்தால் மாத்திரமே நாம் இலங்கையில் மக்களுக்கு சுனாமி தொடர்பான எச்சரிக்கையை விடுப்போம். நேற்று பிற்பகல் வரை அவ்வாறு குறிப்பிட்ட பகுதியில் பூமி அதிர்ச்சிகள் இடம்பெற்றதாக தகவல்கள் இல்லை.
அவ்வாறான தகவல்கள் இன்று (06) கிடைத்தால் அது தொடர்பான எச்சரிக்கையை மக்களுக்கு விடுப்போம்.
நேற்றைய தினம் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக இந்தோனேசியாவிலிருந்து தெரிவிக்கப்படுகின்றதே என ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வானிலை அவதான நிலைய பணிப்பாளர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதேசங்களில் சிறு சிறு பூமியதிர்ச்சிகள் இடம்பெறலாம். எனினும் 7 றிச்டர்க்கு மேலேஅதிகமாக இருந்தால் மட்டுமே அது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
2004 ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி ஏற்பட்டதன் பின்னர் நாம் சில அனுபவங்களைப் பெற்றுக்கொண்டோம். அப்போது இந்து சமுத்திரத்தில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு நிறுவனங்கள் எதுவும் இருக்கவில்லை. எனினும் 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு இந்து சமுத்திர சுனாமி எச்சரிக்கை மையம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இணைந்ததாக இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் எச்சரிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களிலிருந்து எமக்கு அறிவிக்கப்பட்டால் மாத்திரமே நாம் சுனாமி எச்சரிக்கையை விடுக்க முடியும்.
மழையை விட அதிக காற்றையே நாம் எதிர்பார்க்கின்றோம். மழையும் இன்று (06) தொடக்கம் அதிகரிக்கலாம்.
இதன்மூலமான பாதிப்புக்கள் ஏற்படுமானால் நாம் மக்களுக்கு உடனடியாக அறிவிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளோம். பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்கள் இடம்பெறுமானால் ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னரே மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புவதற்கு அவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வர். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment