ஒரு சட்டகத்துக்குள் எந்தக் கலைஞனும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகள் கவிஞர் ஜமீலுக்கும் நிகழ்ந்தன
எழுத்தாளர் உமாவரதராஜன்
பீ.எம்.எம்.ஏ .காதர்
வாழ்வனுபவங்கள் மூலம் அலாதியான சில படைப்புகளை குழந்தைகளின் உலகம் பற்றிய படப்பிடிப்புகளைத் தந்த அதே வேளை குழந்தைகளை எப்போதும் எல்லாக் கோணங்களிலும் படம் பிடிக்க முயலும் வலிந்தெழுதும் ஒரு போக்கும் கவிஞர் ஜமீலையும் பற்றிக்கொண்டது என எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார்.
மருதமுனை ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான“அவன் பையில் ஒழுகும் நதி” நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் எழுத்தாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது இங்கு இலக்கிய அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-நண்பர் ஜமீல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கவிஞர் .இது அவருடைய ஏழாவது நூல் . ஐந்தாவதாக வெளிவரும் கவிதைத்தொகுப்பு
ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும் குழந்தைகளை மையமாகக் கொண்டவை . .நாளடைவில்'குழந்தைகள் உலகக் ' கவிஞர் என்று முத்திரை குத்தப் பட்டு விட்டார் .அந்த முத்திரையை அவரும் விரும்பியது போலவே தோன்றியது .
ஒரு சட்டகத்துக்குள் எந்தக் கலைஞனும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகள் அவருக்கும் நிகழ்ந்தன .அந்தக் கூண்டுக்குள் இருந்த படியே அதையொட்டியே தன்னை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் .
ஆனால் அவருடைய முன்னைய தொகுதிகளை விட இந்தத் தொகுப்பில் சிந்தனை முதிர்ச்சியையும் மொழியின் செழுமையையும் உணரக் கூடியதாக இருக்கிறது .குழந்தைகள் உலகம் என்ற வகை மாதிரியிலிருந்து நகர்ந்து வேறு திசைகளையும் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது .முக்கியமாக வாழ்க்கை பற்றிய விசாரணை இயற்கை மீதான லயிப்பு காதலின் மென்னுணர்வு ....பால்யகால நினைவு மீட்டல்கள் என அவருடைய கவிதையுலகு தன் எல்லைகளை அகலித்திருக்கின்றது .ஜமீலின் கவிதைப் பயணத்தில் இந்தத் தன்மையானது குறிப்பிடத் தகுந்த ஒரு அறிகுறி . ஜமீலின் பெரும்பாலான கவிதைகளில் உள்ள சிறப்பான அம்சம் அவற்றில் தென்படும் அவதானிப்புகள் .அவர் சில சம்பவங்களை அபாரமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் .
ஆனால் அதே வேளை கவிதை என்ற கச்சிதமான வடிவத்தை மீறி வார்த்தைகளை அவர் சற்று வாரியிறைப்பது போல் தோன்றுகிறது .இத்தகைய பலவீனமான அம்சத்தை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் . இன்னமும் செதுக்கி இசீராக்கியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்குமே என எண்ண வைத்த கவிதைகள் பல இந்தத் தொகுப்பில் உண்டு .
கிறுக்கலில் தொடங்கி சித்திரம் நோக்கி நகர்ந்த விரல்களை இந்தத் தொகுப்பில் காண்கிறேன் .என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment