கல்முனையின் காவலன் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் காலமானார்.


கல்முனையின் காவலன் என்றழைக்கப்பட்ட கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் இன்று மாலை கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
அவரது ஜனாஸா இன்று(2017.07.25) இரவு  விசேட விமானத்தில் கல்முனைக்கு கொண்டுவரப்பட்டு நாளை(26) கல்முனையில்  அடக்கம் செய்யப்படவுள்ளது.

கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள் 1977 தொடக்கம் 1994ம் ஆண்டு வரையிலான 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றி அரசியலிருந்து  கெளரவமாக ஓய்வு  பெற்றவர். பின்னர் சில ஆண்டுகள் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றினார்.

பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை செயற்படுத்த விரும்பாத மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டுவந்தவர். சமூக பொறுப்புகள் நிறைந்த, சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர்ந்த சமூக குறிக்கோள்களைக் கொண்டிருந்தார்.

தன்னுடைய அரசியல் காலகட்டத்தில் இனவாத தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போதும் அதை தன் குறிக்கோளை கருக்கி விடாத வகையில் தன்னையும் முரண்பட்டுக்கொள்ள இருந்த சமூகங்களையூம் தன்னால் முடிந்தளவூ புரிந்துணர்கவுளை ஏற்படுத்தி காத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு செயலாற்றியவர்.

இக்காலகட்டத்தில் சமூகங்களுக்கிடையே ஆங்காங்கே பற்றிக் கொண்ட இனவாத தீப் பொறிகளுக்கு இன உணர்ச்சி என்ற எண்ணெய் அண்டிக்கொள்ளாவகையில் அதனை அணைத்துவிட அர்பணிப்புடன் செயற்பட்டமை அவருக்கே உரித்தான ஆளுமை என்றால் அது மிகையாகாது.

தனது தந்தையான எக்கீன் தம்பி ஆலிமைப் போன்று தனது இளைய மகனை ஒரு ஆலிமாக ஆக்கி மார்க்கப் பணியிலும், சமூகப் பணியிலும் ஈடு கொடுக்க வேண்டும் என ஆசை கொண்டிருந்த அப்துர் றஸாக் மற்றும் முஹம்மது அப்துல் காதர் சரீபா உம்மா ஆகியோருக்கும் இளைய பிள்ளையாக 1933.5.30ம் திகதி பிறந்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள்.

கல்முனைக்குடி அரசினர் தமிழ் ஆண்கள் பாடசாலை (அல்-அஸ்ஹர்) தனது ஆரம்பக் கல்வியை கற்கத் தொடங்கினார். அத்துடன் நாலாம் குறிச்சித் தைக்ககாவில் (மஸ்ஜிதுல் ரஹ்மான்) இயங்கி வந்த குர்ஆன் மதரஸாவிலும் இணைந்து தமது மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

1943ம் ஆண்டு 5ம் ஆண்டு அரசாங்க புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று மேலதிக கல்வியை காத்தான்குடி முஸ்லிம் கல்லூரியில் 1944ம் ஆண்டு தொடர்ந்தார்.

1945ம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கில பாடசாலையாக அறிமுகமான கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து ஆங்கிலக் கல்வியை கற்கத் தொடங்கினார். இதே வருடம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 12 வயதில் அவரது தந்தை இறையடி சேர்கிறார். (இன்னாலிலாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்)

1947ம் ஆண்டு மட்டுநகர் சிவானந்தா வித்தியாலயத்தில் இணைந்து கொண்டார். 1948 தொடக்கம் 1952 வரையான காலப்பகுதியில் திரு. ராஜகாரியர் அதிபராக இருந்த மட்டுநகர் அரசினர் கல்லூரியில் இணைந்தார். அக்காலத்தில் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியராக இருந்த புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார்.

1953 தொடக்கம் 1954 வரையாக காலப்பகுதியில் உயர்கல்விக்காக கொழும்பு சேன் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து உயர்தர தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைந்தார். 

1955 தொடக்கம் 1958 வரையாக காலப்பகுதியில் கொழும்பு சட்டக்கல்லூரியில் இணைந்து கற்றார். இக்காலப்பகுதியில் கட்டக் கல்லூரியின் தூதுக்குழுக்களில் பங்கு பற்றி பாக்கிஸ்தான் நாடு சென்றார்.

1958 காலப்பகுதியில் சட்டக்கல்லூரியில் சித்திபெற்று உயர்நீதிமன்ற அப்புக்கத்தாக (சட்டத்தரணியாக) சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

1958 முதல் 1961 வரை பிரபல சட்டத்தரணியான திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் QC , ஜனாப் இஸ்ஸதீன் மொஹமட் QC, ஜனாப் ஏ.சீ.எம். அமீர் QC, முன்னாள் பிரதம நீதியரசர் என்.டீ.என். சமரகோன் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில் புரிந்து வந்தார்.

1958 கல்முனை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும், வன்னிமையுமான கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்து கொண்டார்.

1959ம் ஆண்டு தனது பெயர் சொல்லும் வாரிசாக மகள் மின்ஹா மன்சூர் பிறந்தார். 1962 சிரேஷ்ட சட்டத்தரணியாக தொழிலில் ஈடுபட்டார். இவரின் ஆக்கபூர்வமான சிந்தனையு டன் கூடிய தொடர்பாடல் பழங்கங்கள் ஏற்பட்டது.

தனது வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் தன்னை எரித்து ஒளிகொடுத்த அன்புத்தாயார் 1962இல் இடையடி சேர்கின்றார். (இன்னாலிலாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்)

இதனது மாமாவான கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு  பெற்ற பின்னர் இவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கல்முனை பட்டின சபை தேர்தலில் முதல்முதலாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

1966இல் அவருக்கு இரண்டாவது வரிசாக மகன் றஹூமத் மன்சூர் (நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு  அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர்) அவர்களும், 1970 இல் மூன்றாவது மகளாக மரீனா மன்சூர் (சட்டத்தரணி) அவர்களும் பிறந்தார்கள்.

முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 1970ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

மீண்டும் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி பெற்று பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குக் குழு உயர் பதவி அபேட்சகராகவும், நெடுஞ்சாலைகள் ஆலோசனைக்குழு, போக்குவரத்துச் சபை ஆலோசனைக்குழு, கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் ஆலோசனைக்குழு, கல்வி ஆலோசனைக்குழு, பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக்குழு ஆகிய குழுக்களுக்கு தெரிவு  செய்யப்பட்டதோடு மட்டுமல்லாது பேராதனைப் பல்கலைக்கழக  செனட் சபை அங்கத்தவராகவும் நியமனம் பெற்றார். 

இதே காலகட்டத்தில் ஈராக், குவைத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கைத் தூதுக் குழுவில் இடம்பெற்று நல்லெண்ண விஜயங்களை மேற்கொண்டார்.

1979ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டு சில மாதங்கள் அம்மாவட்ட மக்களுக்காக பல சேவைகளை பெற்றுக் கொடுத்தார். 
தொடர்ந்து அதேவருடம் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெற்று தனது சேவையை மேலும் விரிவாக்கிக் கொண்டார்.

1980ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக்கூட்டத்திற்கு இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்று வாஷிங்டன், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள இராஜதந்திரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

1981ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் அல்-ஹாஜ். எம்.எச். முஹம்மது அவர்களுடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, குவைத்ப,ஹ்றேன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கு நல்லெண்ண விஜயங்களை மேற்கொண்டு இராதந்திரங்களை வளர்த்துக் கொண்டார்.

1981.03.27ம் திகதி கல்முனைத் தொகுதிக்கு ஒரு கலங்கரை விளக்காக கல்முனை பொது நூலகத்தை நிர்மானித்து அதனை திறந்து வைத்தார்.

1982ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் வெற்றிக்கு அளப்பெரும் பாடுபட்டு கல்முனைத் தொகுதியில் 18372 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார்.

பொதுத் தேர்தலுக்குப் பதிலாக 1982ம் ஆண்டு தேசிய பொது வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்து அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவு  செய்யப்பட்டார்.

1987 சர்வதேச பாராளுமன்ற சம்மேளனக் கூட்டம் ஆஜன்ரீனாவில் நடைபெற்றபொழுது முன்னாள் சபாநாயகர் ஈ.எல். சேனாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் அனுர பண்டார நாயக்க ஆகியோருடன் இணைந்து பங்கெடுத்துக் கொண்டார்.

அதேபோல் மலேசியாவில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச தமிழ் ஆராச்சி மாநாட்டில் முன்னாள் இந்து சமய தமிழ் மொழியாக்கல் அமைச்சர் செல்லையா இராசதுரையயுடன் இணைந்து கலந்து கொண்டார். 

இதேகாலப்பகுதியில் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட யூத்தத்தை முடிவூக்குக் கொண்டு வரும் வகையில் பக்தாத் நகரில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டிற்கு இலங்கை தூதுக்குழுவின் சார்பில் முக்கிய பிரமுகராக பங்காற்றினார்.

1988இல் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாசா அவர்களின் பெற்றிக்கு அயராது பாடுபட்டு கல்முனைத் தொகுதியிலிருந்து 18746 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார். இதேவருடம் பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச பாராளுமன்றக் கூட்டத்தில் பங்குகொண்டார்.

1989ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவூம், வர்த்தகம், கப்பல்துறை அமைச்சராகவூம் நியமனம் செய்யப்பட்டார். இதனூடாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர் என்ற பெருமையை கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

அதேகாலகட்டத்தில் பாக்கிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை - பாக்கிஸ்தானுக்கிடையிலான உறவை மேம்படுத்தினார். அத்தோடு துருக்கி வர்த்தக அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் அந்நாட்டில் நடந்த சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்டார்.

1990ம் ஆண்டு வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக நியமனம் பெற்று அப்போதைய பிரதமருடன் இணைந்து ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் விசேட தூதுவராக ஈரான் நாட்டிற்கு விஜயம் செய்தார். தொடர்ந்து முன்னாள் தோட்டத் துறை அமைச்சர் நிரஞ்சன் விஜயரட்ணவுடன் இணைந்து ஈரான் மற்றும் லிபியா நாடுகளுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.

1991இல் லிபியாவில் நடைபெற்ற மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் ஆற்றுத்திட்ட நிறைவு  விழாவில் மாண்புமிகு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அதேவருடம் கொலம்பியாவில் நடைபெற்ற அங்ராட் மாநாட்டிற்கு இலங்கையின் வர்த்த அமைச்சர் என்ற வகையில் இலங்கைக் கான குழுவினை தனது தலைமையின் கீழ் கொண்டு சென்றார்.

1991.03.15ம் திகதி மக்கள் சேவையில் மிகழும் மாண்புமிகு வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களுக்கு சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்களால் மனமுவர்ந்து வரவேற்பு விழா ஒன்றை வெகு விமர்சையாக நடாத்தி கௌரவித்தார்கள்.

1992 திருப்பதியில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸின் 79வது மாநாட்டிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான முன்னாள் அமைச்சர் போல்பெரேரா மற்றும் கொழும்பு பிரதி முதல்வர் கணேசலிங்கம் ஆகியோர் உள்ளடங்கிய தூதுக் குழுவிற்கு தலைமைதாங்கிச் சென்றார். 

1992.08.28ம் திகதி மாண்புமிகு அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களது பொதுப் பணியை மதித்த அவரது கல்முனைக்குடி மக்கள் "மகிழ்ச்சி விழா மலர்" ஒன்றினை வெளியீடு செய்து கௌரவிக்கப்பட்டார்.

1994ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்று தனது அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு  பெற்றார்.

2002ம் ஆண்டு குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு அளப்பரிய சேவை புரிந்தார்.

2011.10.15ம் திகதி கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்கள் சட்டத்தரணியாக 50 வருடங்களைப் பூர்த்தி செய்தமைக்காக கல்முனை சட்டத்தரணி சங்கத்தினால் பாராட்டு விழாவும் கௌரவிப்பும் நடைபெற்றது.

2013.10.19ம் திகதி முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களுக்கு மருதமுனை மக்கள் சொரியும் நன்றிப் பூக்கள் என்ற வகையில் "விருட்சம்" சஞ்சிகை வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவின்போது கடந்த 2016.03.20ம் திகதி ஞாயிற்குக் கிழமை கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.

தமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை விருத்தியடையச் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வர்த்தகத்தின் ஊடாக சமூகப் பொருளாதாரத்தின் தரத்தினை உயர்வடையச் செய்தல், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, தொழில்வாயப்பு, மின்சாரம், மீன்பிடி,
விவசாயம், கலை, கலாசாரம், விளையாட்டு, வாழ்வாதாரம், சுயதொழில் ஊக்குவிப்பு, போன்ற விடயதானங்களில் தேசிய ரீதியில் அரசினால் செயற்படுத்தப்பட்டுவரும் பொறிமுறைகளுக்கு அமைவாக பல திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்.
இவரது நிலையான அபிவிருத்திகளில் கல்முனை பொது நூலகம் அமைத்தமை மற்றும் ஏனைய நூலக அபிவிருத்திகள் பாடசாலைகளுக்காக பௌதீக வளங்கள், கல்முனை பொதுச்சந்தை, கல்முனை நீதிமன்றக் கட்டிடத் தொகுதி, பல கோணங்களில் சிதறிக் காணப்பட்ட நிருவாகங்களை ஒன்றிணைக்கும் வகையில் கல்முனை நிருவாகக் கட்டிடத் தொகுதி, கல்முனை நீர்
வழங்கல் திட்டம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்மானம் மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அபிவிருத்தி, கல்முனை தொலைத் தொடர்ப்பு பரிவர்த்தன நிலையம், இலங்கை மின்சார சபை பொரியியலாளர் காரியாலயம், கல்முனை இலங்கை வங்கி கட்டிடம், கல்முனை நகர மண்டபம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பஸ் நிலையமும், பஸ் தரிப்பிடமும், வீடமைப்புத் திட்டங்கள் போன்ற பல அபிவிருத்திப் பணிகள் இன்றும் காலத்தால் அழியாதவைகளாக காணப்படுகின்றன.
மன்சூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக் கூறும் வகையில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய நூல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வெளியிடப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்