காத்தான்குடி கடற்கரை வீதி திறந்து வைப்பு
(ஆர்.ஹஸன்)
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்) நேற்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற வீதி திறப்பு விழாவில், இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
காத்தான்குடி கடற்கரை வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்கமைய 2.8 கிலோ மீற்றர் தூரம் காபட் இடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள சிறயளவு தூரத்தையும் காபட் இடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் வை.தர்மரத்தினரம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பி.பத்மராஜா, முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி., ஹிரா பௌண்டேஷன் செயலாளர் அஷ்செய்க் மும்தாஸ் மதனி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மொஹமட் றுஸ்வின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment