நாட்டின் நிலை கருதி வேலைநிறுத்தத்தில் குதிக்க வேண்டாம்
டெங்கு, சீரற்ற காலநிலை, போன்றவற்றால் நாடு முழுவதிலும் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தத்தில் குதிப்பது நியாயமானதா என்பது தொடர்பில் மேலும் ஒரு முறை சிந்திக்குமாறு பாவனையாளர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் குறித்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
சைட்டம் (SAITM) தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாளை (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கோரும் விதத்தில், குறித்த எழுத்து மூலமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும், கட்டில் ஒன்றை பெற முடியாத அளவிற்கு, டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், தனியார் வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும், அச்சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்திற்கொண்டு, நாளை (05) மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலான சைட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்தல், அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை இல்லாதொழிக்கும் முறைமையை செல்லுபடியற்றதாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிரான, நாளைய வேலைநிறுத்த போராட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சார்ந்த, 100 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment