சிறுவர்கள் உள்ளிட்ட 146 பேரை பலி கொண்டது அனர்த்தம் (UPDATE)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும்சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சிறுவர்கள் உள்ளிட்ட 146 ஆக அதிகரித்துள்ளதோடு, 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 

15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு

 
நாட்டின் 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வனர்த்தம் காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிநோக்கியுள்ளன.
 
 
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்கள் அதிக உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இவற்றில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது.
 

நாளை மழை தொடரும் வாய்ப்பு

 
தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும், தென் மேற்கு பருவப் பெயர்ச்சி காற்று காரணமாக, நாளைய தினம் (29) தென் மேற்கு திசையில் சுமார் 15cm (150mm) வரை மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
 

ஆறுகள் பெருக்கெடுப்பு; பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்

 
இதேவேளை, குறித்த பகுதிகளில் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என்பதோடு, குளங்கள் பெருக்கெடுத்தவாறு காணப்படுவதுடன், சில குளங்களின் அணைக்கட்டு உடையும் நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 

மண்சரிவு அபாயம்

 
இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, கண்டி, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், குறித்த பகுதிகளிலிருந்து அகன்று பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 

மீட்புப் பணி தொடர்கிறது

 
கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளில் முப்படையினர், பொலிசார், பொதுமக்கள் மற்றும் சமூகசேவை நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்