பாடசாலைகளில் டெங்கு அடையாளம் கண்டால் அதிபர் மீது வழக்கு

பாடசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் டெங்கு நுளம்பு உற்பத்தியாவது அடையாளம் காணப்பட்டால் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த அரச நிறுவனத்தின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதியில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டால் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்படவிருப்பதுடன், பயன்படுத்தாதுள்ள மீன்பிடிப் படகுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கல்வி அமைச்சு அதிகாரிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் அதிகாரிகள், மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள், முப்படையினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும், இதிலேயே மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். இச்சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அமைச்சில் நடைபெற்றது.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட முன்னர் சகல பாடசாலைகளையும் சுத்தம் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும், பெற்றோரின் உதவியுடன் இதனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டுள் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இவ்வாறான சுத்தப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து, அதன் முன்னேற்றத்தை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறியப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் டெங்கு தடுப்பு செயற்பாடுகளை சுற்றாடல் பொலிஸ் பிரிவினரும், பொது சுகாதார பரிசோதகர்களும் முன்னெடுப்பார்கள். முன்னுரிமை அடிப்படையில் சுற்றாடல் பிரிவு பொலிஸாரின் சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் உறுதியளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பயன்படுத்தாதுள்ள மீன்பிடிப் படகுகளில் டெங்கு நுளம்புகள் உருவாவதைத் தடுக்கும் வகையில் அவற்றை அழிப்பதற்கான செயற்பாடொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம். இவ்வாறு பயன்படுத்தாதுள்ள படகுகள் பற்றிய விபரங்களை வழங்குமாறு மீன்பிடித்துறை அமைச்சிடம் கேட்டுள்ளோம். பெரும்பாலான படகுகள் கண்ணாடியிழையினால் தயாரிக்கப்பட்டவை என்பதால் அவற்றை அழிப்பது சூழலுக்கு மாசினை ஏற்படுத்தும். எனவே, ஹொல்சிம் சீமெந்து நிறுவனத்தின் உதவியுடன், இயந்திரங்களில் இட்டு பாதுகாப்பான முறையில் அவற்றை அழிக்க எதிர்பார்த்துள்ளோம். இதற்கான செலவுகள் குறித்து அறிவிக்குமாறு அவர்களிடம் கோரியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
டெங்கு ஒழிப்புக்காக சுகாதார அமைச்சில் விசேட தகவல் மையமொன்று உருவாக்கப்பட்டு, தனிப்பட்ட தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்படும்.
இந்த விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக டெங்கு தொற்றுக் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்களுக்கு என தனியார அலகொன்றை ஆரம்பிக்குமாறும், அவ்வாறில்லாவிட்டால் வார்ட்டுக்களில் டெங்கு நோயாளர்களுக்கு என தனியான கட்டில்களை ஒதுக்கி வைக்குமாறும் பணிப்புரை விடுத்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி