காணாமல்போன ஏனைய நான்கு மீனவர்களும் மீட்பு
காணாமல்போய் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நான்கு கல்முனை மீனவர்களும் மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு பிரிவினரால் இன்று (12) வியாழக்கிழமை அதிகாலை மாலைதீவு வடக்கு கடற்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணமல்போன நிலையில் இரண்டு மீனவர்கள் மாலைதீவு மீனவர்களால் கடந்த புதன்கிழமை (4) பாதுகாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.ம்.எம். ஹரீஸ் மாலைதீவு சென்று அந்நாட்டு உப ஜனாதிபதி அப்துல் ஜிஹாத் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆதம் சரீப் ஆகியோருடன் கலந்துரையாடி ஏனைய நான்கு மீனவர்களையும் தேடும் பணியினை துரிதப்படுத்தியிருந்தார்.
இதன்விளைவாக மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் குறித்த நான்கு மீனவர்களும் மாலைதீவின் வடக்கு பிரதேச கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.
மீட்கப்பட்டுள்ள இம்மீனவர்களை இன்று (12) மாலை அல்லது இரவு வேளையில் தித்துத் தீவுக்கு அருகில் உள்ள தீவில் கரைசேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இம்மீனவர்கள் மாலைதீவு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் இருப்பதை அந்நாட்டு அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இம்மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவருவது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் ஆகியோர் ஒன்றினைந்து செயற்படுகின்றனர்.
Comments
Post a Comment