தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தத்தின் பங்காளர்கள். முஸ்லிம்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.

கலாநிதி எஸ்.எல்.றியாஸ்

தற்போதைய அரசினால் இன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு முயற்சிகள் முழுமையாக முஸ்லிம் சமூகத்தினை புறக்கணித்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தத்தின் பங்காளர்கள். முஸ்லிம்களே இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான தரப்பினராகும். முஸ்லிம்களை பின்தள்ளிவிட்டு ஒரு தீர்வினை நோக்கிய அரசின் போக்கானது வருத்தத்திற்குரியதாகும் என தேசிய ஜனநாயக மக்கள் கூட்;டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்கிஸ்சை பிர்ஜாயா ஹோட்டலில் இடம்பெற்ற பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார்.
வடக்கில் பல்லாயிரம் உயிர்களை காவுகொண்ட யுத்தத்திற்கு காரணமான அத்தனை காரணிகளும் இன்று கிழக்கினை ஆக்கிரமித்து வருகின்றன. ஒரு புறம் நடைபெற்ற யுத்தத்திற்கான தீர்வு முயற்சிகள் மறுபுறம் இன்னொரு யுத்தத்திற்கான முஸ்தீபுகள். மிகவும் கொடுமையான ஒரு காலத்தினை நோக்கி கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் சமூகங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இன்று இரண்டு கட்சிகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றன. கல்முனை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு நகரில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பேசும் போது இந்த இரண்டு கட்சிளையும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்து விட்டு வீதிக்கு வீதி மேடை போட்டு வீரம் பேசுகின்ற ஒரு சமூக அக்கரையற்றவர்களை கொண்ட ஒரு குழுவினர் இன்று இந்த நாட்டு முஸ்லிம்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சி எப்படி தமிழர்களின் தாயக பூமியாக இருக்கின்றதோ அதற்கு எந்த வகையிலும் குறையாத அந்தஸ்த்தோடு கல்முனை முஸ்லிம்களின் தாயக பூமியாக திகழ்கின்றது. இன்னும் திகழும். இன்று கல்முனையின் நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. முஸ்லிம்கள் வாழும் ஒரு வீதியின் பெயரைக்கூட மாற்ற முடியாத அளவுக்கு முஸ்லிம் கட்சிகள் கல்முனை விடயத்தில் பலம் குன்றி காணப்படுகின்றன.
இன்று முஸ்லிம் கட்சிகள் வெளிநாட்டு பிரதிநிதிகளோடு படம் பிடிக்கும் போராட்டத்தில் குவித்துள்ளன. ஐ.நா. பிரதிநிதிகள் இலங்கைக்குள் வருகின்றபோது அவரோடு பேசி ஒரு புகைப்படம் எடுத்து விட்டு முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசினோம் என்கின்றனர். முடிந்தால் இந்த கட்சிகள் அந்த அறிக்கையினை பாராளுமன்ற ஹென்சாட்டில் பதிவிடுமா என்றால் அது அவர்களால் முடியாது.
இன்று வரை இந்த நாட்டில் இடம் பெற்ற இனப்பிரச்சினையில் முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புக்கள் என்ன? அதற்கு தமது கட்சி முன்வைக்கும் தீர்வுதான் என்ன? என்பது பற்றி எந்த வித அக்கரையும் அற்றவர்களினால் நிருவாகிக்கப்பட்டு வரும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் அறிவியல் வெறுமையும் அரசியலில் பங்குபற்றுவதில் இருந்து வருகின்ற பொடு போக்கையும் இன்று சிலர் தமது அரசியல் நகர்வுக்கான மூலதனமாக கொண்டு செயற்படுகின்றனர். இவர்களிடமிருந்து முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டியதே இன்று முஸ்லிம் புத்திஜீவிகளிடம் இருக்கும் முதலாவது கடமையாக இருக்கின்றது. இன்றைய முஸ்லிம்களின் அரசியல் புதியவர்களிடம் கைமாற வேண்டிய காலம் நெருங்குகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது