தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கருத்துக்களை கண்டறியும் செயலமர்வு
உத்தேச அரசியலமைப்புக்கான சீர் திருத்தங்கள் மீதான பொது மக்கள் யோசனைகள் முன் வைக்கப்படவுள்ள இச்சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்ட பொது மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வு எதிர் வரும் 27,28 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது.
உத்தேச அரசியலமைப்பு சீர் திருத்தத்தில் ஒரு அங்கமான தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கருத்துக்களை கண்டறியும் செயலமர்வு தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (20.02.2016) அம்பாறை மாவட்டத்தில் நடை பெற்றது.
இந்த செயலமர்வு சேனைக்குடியிருப்பு சேவோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் கல்முனை சுப்பர் ஸ்டார் விடுதியில் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த கல்விமான்கள்,புத்தி ஜீவிகள் , அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் சபாநாயகம் ஸ்ரீதரனின் வழிகாட்டுதலுடன் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் அரசியலமைப்பு திருத்தத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான வேட்பாளர்கள் தெரிவு செய்தல், கட்சி மாறுதல், தேர்தல் பிரச்சாரங்களுக்கான செலவுகளை மட்டுப்படுத்தல், இளையோர், பெண்களின் பிரதிநிதித்துவம், தேசியப்பட்டியல் நியமனம், இரட்டை வாக்குரிமை, வெளிநாட்டில் வதிவோருக்கான வாக்குரிமை போன்ற பல விடயங்கள் ஆரயப்பட்டு இது தொடர்பாக அரசியலமைப்பு சீர் திருத்தங்கள் மீதான பொது மக்கள் யோசனை குழுவிடம் முன் வைப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.
Comments
Post a Comment