கோவணம் அணிந்து கொழும்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வரவு செலவுத் திட்டத்தில், உர மானியம் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கோவணம் அணிந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு நகரில் இடம்பெற்ற இவ்வார்ப்பட்டம் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, விவசாயிகள் தங்களது விவசாய உபகரணங்களுடன், கோவணம் (கச்சை) அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வரவு செலவுத் திட்டத்தில், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கோசங்களை எழுப்பினர்.
அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன இது குறித்து தெரிவிக்கையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உரமானியத்திற்கு பதிலாக வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் ரூபா 25,000 வழங்குதவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூபா 7,000 நஷ்டத்தை விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர்.
மேலும், விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவில் ரூபா 50 குறைக்கப்பட்டுள்ளதோடு, விவசாயக் காணிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது விவாசயத்திற்கும் விவசாயிகளுக்கும் பாரிய இழப்பாகும் என்றார்.
Comments
Post a Comment