வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது
பதிப்பு 02
நாளை (15) அரச மற்றும் தனியார் துறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தேசிய தொழிற்சங்கங்களின் சம தலைவரும், ஒருங்கிணைப்பாளரும், அரசாங்க தாதியர்கள் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
பதிப்பு 01
நாளை (15) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திலிருந்து தாங்கள் விலகுவதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ரயில் சேவை சங்கம் மற்றும் ஐ.தே.க.வின் தேசிய தொழிலாளர் சங்கம் என்பன அறிவித்துள்ளன.
தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாலேயே தாங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
புகை பரிசோதனைக் கட்டணம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர கட்டணம் ஆகியவற்றை குறைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (14) ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை, முன்வைத்தே தனியார் பஸ் சேவை ஊழியர் சங்கம் இத்தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசாங்கத்தை எதிர்த்து, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை என ஐ.தே.க.வை மையமாகக் கொண்ட, தேசிய தொழிலாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் உப தலைவர் சுனில் டி சில்வா தெரிவித்தார்.
அதே போன்று, ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் என ரயில் சேவை சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் பிரதான செயலாளர் சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, பல்வேறு சங்கத்தினரும் இப்போராட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், நாளைய (15) போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அரச, கூட்டுத்தாபன மற்றும் தனியார் துறை சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்புகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments
Post a Comment