கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அப்பகுதி தமிழர்கள் எதிர்ப்பு



இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் ததேகூவின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக மேற்கு பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வயல் நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களுக்கு சொந்தமானவை எனறு கூறும் ஆர்ப்பாட்டகாரர்கள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்காக இன ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட செயல்பாடாகவே இதனை தாங்கள் கருதுவதாக தெரிவிக்கின்றனர்.
பேரணி முடிவில் ஏற்பாட்டாளர்களினால் இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மனுக்கள் ஏற்பாட்டாளர்களினால் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
விவசாயிகள் மற்றும் நன்னீர் மீனவர்களின் நலன்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உத்தேசத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் எந்தவொரு இனத்திற்கும் எதிரானது அல்ல என்று இத்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான துணை அமைச்சர் எச்.எம்.ஹாரீஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் பற்றி ஏற்கனவே கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழர் தரப்புக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது