முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த ஹெல உறுமய சதி! நிஸாம் காரியப்பர் குற்றச்சாட்டு
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜாதிக ஹெல உறுமய பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாக கல்முனை மாநகர முதல்வர் எம். நிஸாம் காரியப்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
இந்த நிலைப்பாடு சகல சிறு கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும்.
இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சவூதி அரேபியா சென்றிருந்த போது அவர் சார்பில் அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைப்பாடு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சரான றிஷாத் பதியுதீனும் அமைச்சர் திகாம்பரமும் ஏற்றுக் கொண்டு அவர்களும் அதற்கு உடன்பட்டிருந்தார்கள்.
அதாவது முன்மொழியப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையில் இரண்டு வாக்குச் சீட்டுகள் கொண்டு வரும் பட்சத்தில் அது சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளினால் ஏற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலைப்பாடாகும்.
தற்பொழுது ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அதன் பேச்சாளர் நிஷாந்தவும் இதற்கு பிழையான கருத்தை வெளியிட்டு, நிஸாம் காரியப்பர் ஒரு விதமாகவும் அதற்கு முரண்பட்ட கருத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்வதாகவும் கூறி பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது முற்றுமுழுதாக எமது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சியாகும் என்று நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment